Published : 24 Apr 2020 08:33 PM
Last Updated : 24 Apr 2020 08:33 PM
ஒவ்வொரு 10 நாட்களிலும் கோவிட் -19 பாதிப்புகள் இரட்டிப்பாகின்றன. ஆனால், லாக் டவுன் முடிவு உரிய நேரத்தில் வந்திருக்கவில்லையெனில் இந்நேரம் 1 லட்சத்துக்கும் மேலான கரோனா பாதிப்புகளை நம் நாடு எதிர்கொண்டிருக்கும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறியுள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கை 23,000 ஐத் தாண்டியுள்ளது. இதுவரை 718 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில், பாதிப்புகளின் எண்ணிக்கை 2.7 மில்லியனைத் தாண்டியுள்ளது. இறப்பு எண்ணிக்கை 1.9 லட்சமாக அதிகரித்துள்ளது.
நாட்டில் லாக் டவுன் காரணமாக ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார, வாழ்வியல் இழப்புகளைக் குறித்தெல்லாம் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பேசிவரும் வேளையில், அதேநேரம் லாக் டவுனை உரிய நேரத்தில் கொண்டுவந்திருக்க வில்லையென்றால் என்ன நடந்திருக்கும் என்று நிதி ஆயோக் உறுப்பினர், மருத்துவர் வி.கே.பால் பேசியுள்ளார்.
இதுகுறித்து வி.கே.பால் கூறியதாவது:
''கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது ஒவ்வொரு 10 நாட்களிலும் இரட்டிப்பாகி வருகிறது. மேலும், சரியான நேரத்தில் லாக் டவுன் விதிக்கப்பட்டிருக்கவில்லையெனில், பாதிப்புகளின் எண்ணிக்கை இந்நேரம் ஒரு லட்சத்திற்கும் மேலாக வானத்தை நோக்கிச் சென்றிருக்கும்.
நாடு தழுவிய லாக் டவுனை சுமத்தும் முடிவை நாம் எடுத்திருக்கவில்லை என்றால், இந்நேரம் ஒரு லட்சம் கோவிட் -19 பாதிப்புகளை நாடு எதிர்கொண்டிருக்கும். இது ஒரு நியாயமான மதிப்பீடு.
எப்படியெனில், மார்ச் 21 வரை, நம் நாட்டில் பாதிப்புகள் இரட்டிப்பாகும் நேரம் மூன்று நாட்களாக இருந்தன. இதனால் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னதாகவே பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் காரணமாக அதன் காரணமான மார்ச் 23லிருந்து முடிவுகளில் மாற்றம் தெரியத் தொடங்கின.
ஏப்ரல் 6 அன்று, இரட்டிப்பு வீதம் மேலும் குறைவது தெரிந்தது. இதற்கு நாம் லாக் டவுனுக்கு நன்றி சொல்லவேண்டும். வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அதுகுறித்த தெளிவான கண்காணிப்பு ஒரு பெரிய பலமாக உள்ளது
இன்னொரு பக்கம், சோதனைகளை அதிகரித்தல் மற்றும் தயார் நிலையை மேம்படுத்துதல் தவிர, நாடு ஒரு வலுவான வெகுஜன இயக்கமாக மக்களிடையே மாபெரும் நடத்தை மாற்றத்தையும் கொண்டு வந்துள்ளது. இதற்கும் நாம் நாடு தழுவிய லாக் டவுனுக்கு நன்றி சொல்ல வேண்டும்''.
இவ்வாறு மருத்துவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT