Published : 24 Apr 2020 05:58 PM
Last Updated : 24 Apr 2020 05:58 PM
தமிழகம், குஜராத், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் குறித்தும், எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்ய 4 மத்தியக் குழுக்களை உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.
ஏற்கெனவே கரோனா நிலவரம் குறித்தும், ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவது குறித்தும் ஆய்வு செய்ய 6 குழுக்கள் அமைக்கப்பட்டு அவை மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன
இந்தக் குழுவில் மருத்துவ வல்லுநர்கள், பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள், கூடுதல் செயலாளர் அளவில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தா, ஹவுரா, 24 நார்த் பர்கானா, கிழக்கு மிட்னாபூர், ஜல்பைகுரி, டார்ஜிலிங் ஆகிய மாவட்டங்களில் தீவிரமாக ஆய்வு செய்ய 2 குழுக்கள் சென்றன.
ஆனால், மத்தியக் குழுவுக்கு மேற்கு வங்க அதிகாரிகள் முதலில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனப் புகார் தெரிவி்க்கப்பட்டது. பின்னர், மேற்கு வங்க தலைமைச் செயலாளர் உத்தரவின்படி, மத்தியக் குழுவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது.
இப்போது தமிழகம், குஜராத், தெலங்கானா மாநிலங்களில் கரோனா பரவல், ஊரடங்கு நிலவரம், சுகாதார நடவடிக்கைகள் போன்றவற்றை ஆய்வு செய்ய 4 குழுக்கள்அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் அகமதாபாத், சூரத், ஹைதரபாத், சென்னை ஆகிய முக்கிய நகரங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.
தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேரிடர் மேலாண்மையைச் சமாளிக்கும் பொருட்டு, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பதால் இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT