Published : 23 Apr 2020 05:23 PM
Last Updated : 23 Apr 2020 05:23 PM
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட 2-ம் கட்ட லாக்டவுன் காலத்தில் மக்களிடையே கரோனா வைரஸ் தாக்கும் பயம் அதிகரித்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது
மார்ச் 25 முதல் ஏப்ரல் 14-ம் தேதிவரை முதல் கட்ட லாக்டவுனும், ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 3-ம் தேதிவரை 2-ம் கட்ட லாக்டவுனும் மத்திய அரசு கொண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மக்களின் மனநிலை குறித்து ஐஏஎன்எஸ், சிவோட்டர்ஸ் நிறுவனம் சேர்ந்து கருத்துக்கணிப்பை மார்ச் 16-ம் தேதி முதல் ஏப்ரல் 21-ம் தேதிவரை நடத்தின.
அதில் கரோனாவால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது குறித்து அச்சம் அடைந்துள்ளீர்களா, 2-ம்கட்ட லாக்டவுனில் எப்படி உணர்கிறீர்கள் என்ற கேள்விக்கு மார்ச் 16-ம் தேதி 35.1 சதவீத மக்கள் தங்கள் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் நிலவுவதாகத் தெரிவித்தனர். இதே கேள்விக்கு ஏப்ரல் 21-ம் தேதி கேட்டபோது, 41.2 சதவீதம் மக்கள் அச்சடைந்துள்ளதாகத் தெரிவித்தனர். இதனால் கரோனா மீதான மக்களுக்கு அச்சம் அதிகரித்துள்ளது
கரோனா வைரஸ் குறித்த அச்சம் அதிகப்படுத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு 54.5 சதவீத மக்கள் கரோனா வைரஸ் மீதானஅச்சம் அதிகப்படுத்தப்படவி்ல்லை என்று தெரிவித்தனர். 37.9 சதவீத மக்கள் ஆம், கரோனா மீதான அச்சம் அரசால், ஊடகங்களால் அதிகப்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தனர்.
38.4 சதவீதம் மக்கள் கரோனா வைரஸ் மீதான அச்சத்தை தீவிர எச்சரிக்கையாக எடுப்பதாகவும், 16 சதவீதம் பேர் பெரிய அளவுக்கு தீவிரமாக எடுக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
அதாவது இந்த கருத்துக்கணிப்பு தொடங்கும் போது மரார்ச் 25-ம் தேதி கரோனா வைரஸ் மீதான அச்சம் அதிகப்படுத்தப்படவில்லை என்று 21 சதவீதம் பேர் தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் ஏப்ரல் 21-ம் தேதி இதே கேள்விக்கு 54 சதவீதம் பேர் அச்சம் அதிகப்படுத்தப்படவி்ல்லை நியாயமான முறையில் எச்சரிக்கப்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மக்களுக்கு கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
3 வாரங்களுக்கு மேல் பொருட்கள் இருப்பு வைத்துள்ளது குறித்து கேட்ட கேள்விக்கு 43.3 சதவீதம் பேர் 3 வாரங்களுக்கும் மேலாக பொருட்களை வீடுகளில் இருப்பு வைத்துள்ளதாகத் தெரிவித்தனர். 57.2 சதவீதம் பேர் 3 வாரத்துக்கும் குறைவாகவே பொருட்களை இருப்பு வைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
20.4 சதவீதம் பேர் 2 வாரங்களுக்கு மட்டுமே பொருட்கள்இருப்பு வைத்துள்ளதாகவும், உணவு, ரேஷன், மருந்துகள் போன்றவற்றை ஒரு மாதம் இருப்பு வைத்துள்ளதாக 15.8 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 3 வாரங்கள் வரை இருப்பு வைத்துள்ளதாக 5.6 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT