Published : 23 Apr 2020 05:37 PM
Last Updated : 23 Apr 2020 05:37 PM
கரோனா வைரஸினால் அனைத்து மாநிலங்களும் நிதிப்பற்றாக்குறையில் தள்ளாடுவதால், கோவிட் மானியம் கேட்கவும் நிதி சுமைகளை தள்ளிவைக்கவும் முதல்வர்கள் பிரதமரை வற்புறுத்த வேண்டுமென பஞ்சாப் முதல்வர் யோசனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா நுழைந்ததிலிருந்து பலவிதமான பிரச்சினைகளை கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை உருவாக்கி வருகிறது. தற்போது கரோனா வைரஸினால் மாநில நிர்வாகங்களின் வருவாய் ஆட்டம்கண்டிருக்கும் நிலையில் எதிர்வரும் காலங்களில் நிதிச்சுமையை எதிர்கொள்வது குறித்து யோசிக்கக்கூட நேரமின்றி மாநில நிர்வாகங்கள் கரோனா அவசரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங், கோவிட் 19 நெருக்கடிகளில் இருந்து மாநிலங்களை காப்பாற்றுவதற்காக பிரதமரை வலியுறுத்துமாறு மூன்றுவிதமான யோசனைகளை மாநிலமுதல்வர்களுக்கு தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் மற்ற மாநில முதல்வர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
கோவிட் 19 தொற்றுநோயால் வருவாய் குறைந்து வருவதால் அனைத்து மாநிலங்களும் தள்ளாடுகின்றன, அது மட்டுமின்றி மற்றும் சுகாதார மற்றும் குடும்பநலத்துறை பணிகளுக்கான நிதித் தேவைகளும் கடுமையாக உயர்த்தியுள்ளது.
1. உள்ளூர் நிலைமைகளுக்கேற்ப ஏற்படும் செலவினங்களுக்கு தகுந்தவாறு மாநிலங்களுக்கு நெகிழ்வுத்தன்மையுடன் ஒரு சிறப்பு மூன்று மாத கோவிட் வருவாய் மானியத்தை வழங்குமாறு இந்திய அரசிடம் கோர வேண்டிய அவசரத் தேவை உள்ளது.
2.நிதி ஆணையம் ஆண்டுதோறும் பரிந்துரைகளை வழங்கி வருகிறது. தொற்றுநோயால் நாட்டின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டதால், நடப்பு ஆண்டிற்காக வழங்கப்பட்ட நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் மறுஆய்வு செய்யப் பட வேண்டும்.
3. நிதி ஆணையத்தின் முழு அறிக்கையையும் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். இதனால் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வுக்கான மாநிலங்களின் தேவைகள் கோவிட் 19க்குப் பிறகு முழுமையாக மதிப்பிடப்பட ஏதுவாகும். நிதி ஆணையத்தின் ஐந்தாண்டு அறிக்கை, 2020க்கு பதிலாக, கோவிட் தாக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் ஏப்ரல் 1, 2021 முதல் தொடங்க வேண்டும்.
தேசிய செயல்திறன்களுக்கு தலைமை தாங்கும் மற்றும் கோவிட் 19ன் தாக்கத்தை குறைப்பதற்கான பணிகளை நிர்வகித்துவரும் பிரதமரிடம் கொண்டுசெல்ல வேண்டுமென அனைத்து முதல்வர்களையும் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT