Last Updated : 23 Apr, 2020 01:59 PM

 

Published : 23 Apr 2020 01:59 PM
Last Updated : 23 Apr 2020 01:59 PM

டெல்லியில் பலாப்பழ வியாபாரி கரோனாவில் பலி; ஆசாத்பூர் காய்கறி சந்தையில் பீதி

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

டெல்லியில் பலாப்பழ மொத்த வியாபாரி கரோனாவால் நேற்று பலியானார். இதனால், ஆசாத்பூரின் காய்கறி, பழங்கள் சந்தையில் வியாபாரிகள் இடையே பீதி பரவி உள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக இருப்பது ஆசாத்பூரில் உள்ள காய்கறி, பழங்கள் மண்டி. இங்கு 57 வயதான பலாப்பழ வியாபாரிக்கு கடந்த திங்கள் கிழமை கரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.

இதனால், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் நேற்று இரவு பரிதாபமாகப் பலியாகி உள்ளார். இதன் காரணமாக வடக்கு டெல்லி மாவட்டமான அதன் துணை ஆட்சியர் தீபக் ஷிண்டே தலைமையில் ஆசாத்பூர் சந்தையில் கண்காணிப்பு துவக்கப்பட்டுள்ளது.

இறந்தவரிடம் பணியாற்றிய 20 பணியாளர்கள் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இத்துடன் அவர்களுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆசாத்பூர் சந்தை வியாபாரிகள் இடையே கரோனா பீதி பரவி உள்ளது. இப்பிரச்சனை தீரும் வரை சந்தையை முழுமையாக மூடி வைக்க அதன் வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதை ஏற்று சந்தை முற்றிலுமாக மூடி வைப்பதால் அதற்கு காய்கறி மற்றும் பழங்களை விநியோகிக்கும் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகும். எனவே, சந்தையில் நேரக்கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசனை செய்கிறது.

இதனிடையே, சந்தைக்கு வரும் பொதுமக்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் உள்ளே அனுப்பப்பட்டு வருகிறது. இவர்களும் ஒரே இடத்தில் சந்தையில் கூடிவிடாமல் பறக்கும் டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நேற்று வரை தலைநகரான டெல்லியில் கோவிட் 19 இல் பாதிக்கப்பட்டவர்கள் 2,248, பலியானவர்கள் 48 என உள்ளது. இவற்றில் 75 பேருக்கு புதிதாகக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

டெல்லியின் மொத்தம் 87 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்பட்டியலில் ஆசாத்பூரும் சேர்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x