Published : 23 Apr 2020 01:51 PM
Last Updated : 23 Apr 2020 01:51 PM
டெல்லியில் தப்லீக் ஜமாத் பாதுகாப்புப்பணி செய்த 16 போலீஸாருக்கு கரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் எட்டு பேர் ஒரே காவல்நிலையத்தை சேர்ந்தவர்கள்.
டெல்லி நிஜாமுத்தீனில் உள்ள தப்லீக்-எ-ஜமாத் தலைமையகத்தில் தங்கியவர்களை மார்ச் 31 வரை 4 தினங்களாக வெளியேற்றப்பட்டனர். கரோனா மருத்துவ பரிசோதனைக்காக அவர்களது பாதுகாப்பு பணியில் டெல்லி போலீஸார் ஈடுபட்டனர்.
இவர்களுடன் டெல்லியின் சுகாதாரப் பணியாளர்களும் அப்பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கு முன்பாக பல ஜமாத்தினர் டெல்லியின் பல்வேறு பகுதியிலுள்ள பிரச்சாரப் பணிக்கு சென்று அங்குள்ள மசூதிகளிலும் தங்கியிருந்தனர்.
இவர்களையும் டெல்லி போலீஸார் கண்டறிந்து கரோனா பரிசோதனைக்கான ஏற்பாடுகள் செய்தனர். இதுபோல், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரிந்துள்ளது.
மொத்தம் 52 பேர்கள் அடைந்த பாதிப்பில் டெல்லியின் 16 போலீஸாருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மத்திய டெல்லி பகுதியின் தரியாகன்சில் உள்ள சாந்தினிமெஹல் காவல் நிலையத்தை சேர்ந்த 8 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் நூற்றுக்கணக்கான ஜமாத்தார்களை மருத்துவமனைகளிலும், தனிமைப்படுத்தும் இடங்களிலும் கொண்டு போய் சேர்த்தது காரணமாகக் கருதப்படுகிறது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் டெல்லி காவல்துறை அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ‘துவக்கத்தில் கரோனா பாதிப்பின் எச்சரிக்கைகளை எங்கள் துறையினரால் முழுமையாக உணர முடியவில்லை. இதில், பலரும் தமது ஜிப்சி வாகனத்தில் கரோனா தொற்று கொண்டவர்களையும் ஏற்றிச் சென்றது தவறாகி விட்டது.’ எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், தரியாகன்சில் உள்ள சாந்தினி மெஹல் பகுதி முற்றிலுமாக தடை செய்யப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காவல் நிலையத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
டெல்லி காவல்துறை போக்குவரத்து பிரிவின் துணை ஆய்வாளரான ஜீத்சிங் என்பவர் முதல் நபராக ஏப்ரல் 6 இல் கரோனா தொற்றுக்கு ஆளானார். பிறகு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு தனிமையில் இருந்தவர் பூரண நலமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
கரோனா பரவல் தொடங்கியது வரை பொதுமக்களின் பல்வேறு விமர்சனங்களில் டெல்லி காவல்துறை சிக்கி வந்தது. எனினும், கரோனா பணியில் மருத்துவர்களுக்கு இணையாக தற்போது அவர்கள் செய்து வரும் பாதுகாப்புப்பணி பலராலும் பாராட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT