Published : 22 Apr 2020 05:44 PM
Last Updated : 22 Apr 2020 05:44 PM
கரோனா வைரஸ் பாதிப்பு உலகில் எதிரொலிக்கத் தொடங்கியதிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டதால், உலகில் 154 கோடி மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என்று யுனெஸ்கோ அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இதில் மாணவிகள்தான் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பள்ளி இடைநிற்றல் இனிமேல் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் ஆண்கள், பெண்கள் இடையிலான கல்வி வேறுபாட்டின் அளவும் அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகளின் அறிவியல், கல்வி, கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தாக்கத்தால் உலகில் இதுவரை 25 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.72 லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். இதில் மிக மோசமாக அமெரிக்கா பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 8 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 42 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அடுத்த இடங்களில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன. கரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்தே பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்து எப்போது பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்ற நிலை தெரியாத நிலையில் ஆன்லைன் மூலம் பல நாடுகளில் வகுப்புகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து யுனெஸ்கோவின் கல்விக்கான துணை இயக்குநர் ஸ்டெபானியா ஜியானி பாரிஸ் நகரிலிருந்து தொலைபேசி வாயிலாகப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''கரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டதால், மாணவர்களின் பள்ளி இடைநிற்றல் அதிகரிக்கும். அதில் குறிப்பிட்ட விகிதத்தில் பெண்கள்தான் பாதிக்கப்படுவார்கள். இதன் மூலம் ஏற்கெனவே கல்வியில் இருக்கும் ஆண்-பெண் பாலின இடைவெளியே மேலும் அதிகரிக்கும். பெண் குழந்தைகளுக்குக் குறைந்த வயதிலேயே கட்டாயத் திருமணம் செய்துவைத்தல், மகப்பேறு போன்ற நெருக்கடிக்குத் தள்ளப்படலாம்.
கரோனா வைரஸ் காரணமாக உலக அளவில் கல்வி கற்றலில் இருக்கும் மாணவ, மாணவிகளில் 89 சதவீதம் பேர் பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக பள்ளி,கல்லூரிகளில் சேர்த்து 74 கோடி பெண் குழந்தைகள் உள்பட 154 கோடி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 11 கோடி மாணவிகள் உலகின் மிகக்குறைந்த வளர்ச்சியுடைய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களின் கல்வி ஏற்கெனவே போராட்டமாக இருந்து வரும் சூழலில் கரோனாவால் இவர்களின் நிலைமை இன்னும் மோசமாகும்.
அகதிகள் முகாம்களில் வசிக்கும் மாணவிகள் அல்லது உள்நாட்டில் புலம்பெயர்ந்த மாணவிகள், கரோனாவால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டதால் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே இவர்கள் கல்வியில் பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில் இந்தக் கரோனாவால் அவர்களின் நிலைமை 20 ஆண்டுகள் பின்தங்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு அதிகமான முன்னுரிமை வழங்க வேண்டும்.
.
சமூக அளவில் குறைந்த பாதுகாப்பு கொண்ட நாடுகளில் வாழும் பெண்கள், குழந்தைகள் கரோனாவில் பெரிய பொருளாதாரப் பாதிப்பையும், கல்விரீதியான பாதிப்பையும் எதிர்கொள்வார்கள். இதனால் இவர்களைத் தொடர்ந்து கல்வி பயில நிதி வசதியும், வாய்ப்பும் இருந்தால் மட்டுமே பெற்றோர் அனுப்புவார்கள். இதனால் பள்ளிக்கூடம் எப்போது திறக்குமோ அப்போதுதான் கல்விக்காக பெண்கள் செல்ல முடியும். இல்லாவிட்டால் பள்ளிக் கல்வி தடைபடும்.
ஒவ்வொரு நாடுகளில் இருக்கும் எம்.பிக்கள், செயற்பட்டாளர்கள் காலவரையின்றி மூடப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் கடந்த கால சம்பவங்களை நினைவில் கொண்டு, பெண்கள் சந்தித்த சவால்களை எவ்வாறு முறியடிக்கப்பட்டதோ அதை முன்வைத்து கல்வி தடைபடாமல் கவனிக்க வேண்டும்''.
இவ்வாறு ஸ்டெபானியா ஜியானி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT