Published : 22 Apr 2020 05:01 PM
Last Updated : 22 Apr 2020 05:01 PM
வேலை நிமித்தமாக மாநில எல்லைகளைக் கடக்கும் சுகாதார ஊழியர்கள் ஒவ்வொரு முறையும் விசாரணை செய்யப்படுவதால் நிறைய சிக்கல்களைச் சந்தித்து வருவதாக செவிலியர்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
மத்திய மற்றும் டெல்லி அரசாங்கங்களிலும், டெல்லி, நொய்டா மற்றும் காசியாபாத்தில் வசிக்கும் தனியார் துறைகளிலும் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் பணி நிமித்தமாக மாநில எல்லைகளைக் கடக்க வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் அவர்கள் தினம் தினம் நிறைய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்று அகில இந்திய அரசு செவிலியர் கூட்டமைப்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய அரசு செவிலியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஐஏஎன்எஸ்ஸிடம் கூறியதாவது:
''செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் எல்லையில் நிறுத்தப்படுவது ஒரு பெரிய பிரச்சினை. கடமையில் உள்ள காவல்துறையினர் மருத்துவமனைகள் அல்லது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஐடி அட்டைகளைக் கூடப் பரிசீலிப்பதில்லை. எதையும் முறையாக சரிபார்க்காமலேயே செவிலியர்கள் உ.பி.எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றனர். இதனால் கரோனா பணிகள் பாதிக்கப்படுவது குறித்து உள்துறை அமைச்சருக்கு நாங்கள் (அகில இந்திய செவிலியர்கள் கூட்டமைப்பு) கடிதம் எழுதியுள்ளோம்.
செவிலியர்கள் எல்லையைக் கடக்க அனுமதிக்காவிட்டால், மருத்துவமனைகள் மற்றும் பிற சுகாதார வசதிகள் எவ்வாறு செயல்படும்? ஏனெனில் நொய்டா, கிரேட்டர் நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத், குருகிராம், பல்வால் மற்றும் சோனிபட் போன்ற இடங்களில் ஏராளமான செவிலியர்கள் வசிக்கின்றனர்.
சில நேரங்களில், உத்தரப் பிரதேச மாவட்ட ஆட்சியர் வழங்கிய அடையாள அட்டைகளைச் சரிபார்க்கையில், தரவுகள் நிரப்பப்பட்ட வகையில் இணையதளம் பிழையைக் காட்டுகிறது. உண்மையில் எந்த அடையாள அட்டை இங்கு அவசியம் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து காவல்துறையினருக்கே தெளிவில்லை, இதனால் செவிலியர்கள் தங்கள் அடையாள அட்டைகளை காட்டினால்கூட அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
நேற்று (செவ்வாய்க்கிழமை) உ.பி. காவல்துறை அனைத்து கார்களையும் நிறுத்தி விசாரணை செய்தது. சில நேரம் கார்களை செவிலியர்களே ஓட்டி வருகிறார்கள். அல்லது செவிலியர்களைப் பணிக்கு அழைத்துச் செல்லவோ அல்லது அழைத்து வரவோ குடும்ப உறுப்பினர்கள் ஓட்டி வருகிறார்கள்.
செவிலியர்கள் மட்டுமில்லை, மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களும் இதேபோல நடத்தப்படுகிறார்கள். இது மிகவும் அவசரமான சூழ்நிலை மற்றும் எந்த நேரத்திலும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க சிறப்பு கவனம் தேவை.
இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலையிட வேண்டும். செவிலியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் (அழைத்துச் செல்ல மற்றும் அழைத்துவர) எல்லையைக் கடக்க அனுமதிக்கும் வகையில் முறையான கொள்கை வகுக்கப்பட வேண்டும்.
கடிதத்தின் நகல் மத்திய மற்றும் டெல்லி சுகாதார அமைச்சக அதிகாரிகள் மற்றும் டிஜிஹெச்எஸ் இயக்குநர் ஜெனரலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது''.
இவ்வாறு அகில இந்திய அரசு செவிலியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT