Published : 22 Apr 2020 04:43 PM
Last Updated : 22 Apr 2020 04:43 PM
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட நீண்ட லாக் டவுனில் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு நடுத்தர நிறுவனங்களை எவ்வாறு காப்பது, மீட்பது, பொருளாதார நிதித்திட்டங்களை அறிவிப்பது குறித்து மக்களிடம் இருந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்துகளை வரவேற்றுள்ளார்.
இதற்காக தனியாக ஒரு வலைப்பூவை உருவாக்கி அதில் கருத்துகளைத் தெரிவிக்க ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். முதல்கட்ட லாக் டவுன் காலத்தில் வேளாண் செயல்பாடு, தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்தனர்.
அதன்பின் 2-வது கட்டமாக லாக் டவுன் கடந்த 15-ம் தேதி முதல் வரும் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே முதல் லாக் டவுனில் பெரும் இழப்பைச் சந்தித்துள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் 2-வது கட்ட லாக் டவுனில் மோசமாகப் பாதிக்கப்படும்.
இதைத் கவனத்தில் கொண்டு பொருளாதார பாதிப்பிலிருந்து நாட்டை மீட்கும் வகையில் காங்கிரஸ் கட்சி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு ஒவ்வொரு பிரிவினரும் அடைந்துள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அந்தத் துறையைக் கைதூக்கிவிட தேவையான பொருளாதார நிதித்தொகுப்பு குறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும்
அந்த வகையில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களைக் காக்கும் பொருட்டு தேைவயான பொருளாதார நிதித்தொகுப்பு குறித்து மக்களிடம் ராகுல் காந்தி கருத்து கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில், “கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவந்துள்ள லாக் டவுனால் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள், வர்த்தகம் சீரழிந்துவிட்டது. இந்தத் தொழில்களைக் கைதூக்கிவிட காங்கிரஸ் கட்சி மக்களிடம் உதவியை நாடுகிறது.
குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு எந்த வகையான பொருளாதார நிதித்தொகுப்பு வழங்க வேண்டும் என்பது குறித்து உங்கள் கருத்துகளை voiceofmsme.in எனும் தளத்திலோ அல்லது காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகத்திலோ பதிவிடலாம்'' எனத் தெரிவித்துள்ளார். HelpSaveSmallBusinesses என்ற ஹேஷ்டேகையும் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று முதல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் குறு, சிறு , நடுத்தரத் தொழில்கள் மூலம்தான் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. ஆதலால், அதற்கு அதிகமான நிதித்தொகுப்பு தேவை என வலியுறுத்தப்பட்டது. மேலும் லாக் டவுன் காலத்தில் இந்த நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் 75 சதவீதத்தை அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT