Published : 22 Apr 2020 08:10 AM
Last Updated : 22 Apr 2020 08:10 AM

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானா மலைவாழ் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் காங். எம்எல்ஏ

சீதக்கா

ஹைதராபாத்

தெலங்கானாவில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மலைவாழ் மக்களுக்கு தேவையான உதவிகளை முலுக் தொகுதிஎம்எல்ஏ சீதக்கா செய்து வருகிறார்.

தெலங்கானா - சத்தீஸ்கர்இடையே கோதாவரி நதிக்கரையோரம் மலைப்பகுதிகள் உள்ளன. இங்கு ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மாவோயிஸ்ட்களுக்கும், போலீஸாருக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடைபெறும் இந்தப் பகுதியில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளன. மருத்துவமனை, காவல் நிலையம், இடுகாடு,காய்கறி சந்தை ஆகியவற்றுக்கு மலைவாழ் மக்கள் அதிக தூரம் நடந்துதான் செல்ல வேண்டும்.

இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் மலைவாழ்மக்கள் போதுமான உணவுப்பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதிகளில் விளையும் பழங்கள், காய்கறிகளை உண்டு உயிர் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், முலுக் தொகுதிஎம்எல்ஏவான ‘சீதக்கா’ என்ற தனசாரி அனுசுயா (49) எம்எல்ஏ, மலைகிராமங்களுக்கு சென்று மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். கடந்த மார்ச்25-ம் தேதி முதல் இப்போது வரைதெலங்கானா-சத்தீஸ்கர் எல்லையில் உள்ள கிராமங்களுக்கு டிராக்டர், மாட்டு வண்டிகளில் சென்றுமலைவாழ் மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி, முகக்கவசம், கிருமி நாசினி போன்றவற்றை வழங்கி வருகிறார். இவரைப் பார்த்து கை குலுக்க வரும் மலைவாழ் மக்களுக்கு கரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

முன்னாள் மாவோயிஸ்ட்

முன்னதாக ஜனசக்தி தளத்தில் இவர் முழுநேர மாவோயிஸ்ட்டாக செயல்பட்டார். இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்தன. ஆனால் இவர், மாவோயிஸ்ட் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், கடந்த 1994-ம் ஆண்டு காவல் துறையிடம் சரண் அடைந்தார். அதன் பின்னர் சட்டம் படித்து வழக்கறிஞரானார்.

இதைத் தொடர்ந்து 2004-ம்ஆண்டு, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் அக்கட்சியில் இணைந்து, பெண்கள் பிரச்சினைக்காக போராடினார். இதையடுத்து 2009-ல் முலுக் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரானார். மாநிலபிரிவுக்கு பின்னர், கடந்த 2014-ல்நடந்த தேர்தலில் அதே தொகுதியில் தோல்வி அடைந்தார். பின்னர் 2017-ல் இவர் காங்கிரஸில் இணைந்து, 2018-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முலுக் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x