மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பேட்டி அளித்த காட்சி : படம் | ஏஎன்ஐ.
மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பேட்டி அளித்த காட்சி : படம் | ஏஎன்ஐ.

முஸ்லிம்களுக்கு இந்தியா சொர்க்க பூமி; பொருளாதார, மத உரிமை பாதுகாக்கப்படுகிறது: ஓஐசி விமர்சனத்துக்கு முக்தர் அப்பாஸ் நக்வி பதில்

Published on

முஸ்லிம்களுக்கு இந்தியா சொர்க்க பூமி. இங்கு முஸ்லிம்கள் செழிப்பாக இருக்கிறார்கள். அவரின் மத, பொருளாதார உரிமை பாதுகாக்கப்படுகிறது என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

டெல்லியில் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற முஸ்லிம்கள் பலருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, சமூக ஊடகங்களில் அவர்களுக்கு எதிரான அவதூறு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து கவலை தெரிவித்து இஸ்லாமிய கூட்டமைப்புக்கான அமைப்பு (ஓஐசி) நேற்று முன்தினம் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டிருந்தது. அதில், “இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அவர்களால்தான் கரோனா வைரஸ் பரவுகிறது என்று அந்தக் குறிப்பிட்ட மதத்தின் மீது வெறுப்பு விதைக்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு எதிராகப் பாகுபாடும், வன்முறையும் ஏற்படுகிறது. ஆதலால், முஸ்லிம்களின் உரிமையைப் பாதுகாத்து அவர்களுக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தையும் தடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது.

இஸ்லாமியக் கூட்டமைப்புக்கான அமைப்பின் (ஓஐசி) விமர்சனம் குறித்து மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி இன்று பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி:

முஸ்லிம்களுக்கு இந்தியா சொர்க்க பூமி. அவர்களின் சமூக, பொருளாதார, மத உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் மிகவும் செழிப்பாகத்தான் வாழ்கிறார்கள். இந்தச் சூழலைச் சிதைக்க முயல்பவர்கள் நண்பர்களாக இருக்க முடியாது.

மத்திய அரசைப் பொறுத்தவரை முஸ்லிம்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் பணியைச் செய்து வருகிறது. பிரதமர் மோடி எப்போது பேசினாலும், 130 கோடி மக்களின் நலனுக்கும், உரிமைக்காகவும்தான் பேசுகிறார். இது மற்றவர்களுக்குத் தெரியாவிட்டால் அது அவர்களின் பிரச்சினை.

மதச்சார்பின்மை, ஒருமைப்பாடு அரசியல் சார்ந்தது அல்ல. இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் அதுதான் வேட்கை. தவறான தகவல்களைப் பரப்புவதில் சிலர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதில் நாம் விழிப்புணர்வுடன் இருந்து, அத்தகைய தவறான தகவல்களைத் தோற்கடித்து ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்’’.

இவ்வாறு முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in