Last Updated : 21 Apr, 2020 08:10 AM

 

Published : 21 Apr 2020 08:10 AM
Last Updated : 21 Apr 2020 08:10 AM

டெல்லி காவல் துறை கண்காணிப்பில் தப்லீக் ஜமாத் நிர்வாகிகள்: அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய உத்தரவு

புதுடெல்லி

தப்லீக்-எ-ஜமாத் அமைப்பின் நிர்வாகிகளை டெல்லி காவல் துறை கண்காணித்து வருகிறது. இவர்கள் அனைவருக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 1 முதல் டெல்லி நிஜாமுதீன் மர்கஸில் கூடிய வெளிநாட்டவர்களால் இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்தது. இதனால், கடந்த மார்ச் 27 முதல் 31 வரை 281 வெளிநாட்டவர் உள்ளிட்ட 2,137 பேர் வெளியேற்றப்பட்டு மர்கஸ் சீல் வைக்கப்பட்டது. கரோனா பரவ முக்கியக் காரணமாக இருந்ததாக தப்லீக்-எ-ஜமாத்தின் தலைவரான முஹம்மது சாத் உள்ளிட்ட 7 நிர்வாகிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து 26 கேள்விகள் எழுப்பி மவுலானா சாத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவரது வழக்கறிஞர் குழுவின் மூலம் சில கேள்விகளுக்குமட்டும் பதில் அளிக்கப்பட்டிருந்தது. முக்கிய ஆவணங்கள் தலைமையகமான மர்கஸில் இருப்பதாகவும், கரோனா காரணமாக மேற்கொள்ளும் தனிமை காலம்முடிந்த பிறகு விவரம் அளிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதில், திருப்தி அடையாத டெல்லி காவல் துறை மற்றொருநோட்டீஸ் அனுப்பி உள்ளது. இத்துடன் அமலாக்கத் துறை சார்பில் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் வெளிநாடுகளில் இருந்து மர்கஸுக்கு வந்த நிதிதொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாத் மற்றும் அவரது நிர்வாகிகளுக்கு கரோனாதொற்று உள்ளதா? என மருத்துவப் பரிசோனை செய்து அறிக்கைஅனுப்பவும் டெல்லி காவல் துறை உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் டெல்லியின் ஜாக்கீர் நகரில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தனிமையில் உள்ளனர். இவர்கள் மீதான விசாரணை முடியும் வரை, அவர்கள் வேறு எங்கும் தப்பிச் சென்று விடாதபடி டெல்லி காவல் துறை கண்காணித்து வருகிறது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் டெல்லி காவல் துறை வட்டாரம் கூறும்போது, “ஜமாத் நிர்வாகிகளை நேரில் விசாரித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க விரும்புகிறோம். இதற்காகஅனைவருக்கும் கரோனா சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு உத்தரப்பிரதேசத்தின் பல முக்கிய நகரங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களும், விலை உயர்ந்த பலசொகுசு வாகனங்களும் இருப்பதாகக் கிடைத்த தகவலையும் விசாரித்து வருகிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x