Last Updated : 21 Apr, 2020 08:10 AM

3  

Published : 21 Apr 2020 08:10 AM
Last Updated : 21 Apr 2020 08:10 AM

பெங்களூருவில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மருத்துவ ஊழியர், போலீஸாரை தாக்கிய 59 பேர் கைது

பெங்களூருவில் மருத்துவ ஊழியர்கள் மீது தாக்குதல் நடந்த இடத்தை உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் காவல் ஆணையர் பாஸ்கர் ராவ் பார்வையிட்டனர். படம்: பிடிஐ

பெங்களூரு

பெங்களூருவில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மருத்துவ ஊழியர்கள் மற்றும் போலீஸார் மீது தாக்குதல் நடத்திய 59 பேரை போலீஸாரை கைது செய்துள்ளனர்.

கர்நாடகாவில் வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 395ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள பாதராயணபுராவில் டெல்லி மாநாட்டுக்கு சென்றுவந்த 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 58 பேருக்கு கரோனா அறிகுறி தென்பட்டதால் அனைவரும் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டனர். இதனிடையே கடந்த 11-ம் தேதி பாதராயணபுரா வார்டு முழுவதும் 'சீல்' வைக்கப்பட்டு, ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் 65 வயது பெண்மணி ஒருவர் கரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வீட்டுத் தனிமையில் உள்ள 58 பேரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர். முதல்கட்டமாக 15 பேரை அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டுசென்று தனிமைப்படுத்தினர்.

நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மீதமுள்ளவர்களை அழைத்துச்செல்ல மருத்துவ ஊழியர்கள், போலீஸாருடன் பாதராயணபுராவுக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த இர்பான், வாசி,கபிர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வீட்டுத்தனிமையில் இருப்பவர்களை அரசு கட்டுப்பாட்டு மையத்துக்கு கொண்டுசெல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை மருத்துவ ஊழியர்கள் ஏற்க மறுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்குதிரண்டிருந்த கும்பல் மருத்துவஊழியர்களையும், போலீஸாரையும் தாக்கியது. மேலும் கரோனாதடுப்பு நடவடிக்கைக்காக போடப்பட்டிருந்த பந்தல், தடுப்பு செக்போஸ்டுகளையும் அவர்கள் சேதப்படுத்தினர். இதையடுத்து சம்பவஇடத்துக்கு விரைந்த ஜெகஜீவன்ராம் நகர் போலீஸார் தடியடி நடத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதுகுறித்து பெங்களூரு மாநகரகூடுதல் காவல் ஆணையர் சவுமேந்திர முகர்ஜி கூறும்போது, “இந்ததாக்குதலில் மருத்துவ ஊழியர்களுக்கும், போலீஸாருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. பந்தல், போலீஸ் தடுப்புகள் உள்ளிட்ட பொது சொத்துகள் சேதமடைந்துள்ளன. ஊரடங்கை கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து இந்தியதண்டனைச் சட்டத்தின் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ ஊழியரை தாக்கிய ஒரு பெண் உட்பட 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் கண்டு வருகிறோம். தலைமறைவாக உள்ள மற்றவர்களை விரைவில் கைது செய்வோம்” என்றார்.

எடியூரப்பா எச்சரிக்கை

இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறும்போது, “பாதராயணபுரா வன்முறை குறித்துஉள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். எக்காரணம் கொண்டும் மருத்துவ ஊழியர்களை தாக்குவதை பொறுத்துக்கொள்ள முடியாது. கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மருத்துவஊழியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், போலீஸார், தன்னார்வலர்கள் உள்ளிட்டோருக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அந்தப்‌ பகுதியில் சிலர் அரசின் விதிமுறைகளை மீறி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபோலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன். சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, வன்முறையில் ஈடுபடுவோருக்கு த‌க்கப்பாடம் கற்பிக்கப்படும். கரோனா அறிகுறி உள்ளவர்களை 24 மணி நேரமும் கண்காணிக்க அரசுக்கு உரிமை உள்ளது. எனவே அதிகாரிகள் இரவில் சென்றதை சிலர் விமர்சிப்பது தவறு. இதில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் கர்நாடக அரசுக்கு இல்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x