Published : 20 Apr 2020 06:04 PM
Last Updated : 20 Apr 2020 06:04 PM
பஞ்சாப்பில் லாக் டவுன் தளர்த்தப்படாத நிலையில் அங்கு கடையை மூடும்படி கேட்டுக்கொண்ட காவலர்களிடம் கடை உரிமையாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதுகுறித்த வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
புதிதாக 17 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, பஞ்சாப்பில் இதுவரை 219 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 16 பேர் பலியாகியுள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு சற்றே குறைவான பாதிப்பை ஏற்படுத்திய மாநிலங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சில மாநிலங்களில் மே 3 வரை லாக் டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில், ''தொடர்ந்து பஞ்சாப்பில் கோவிட்-19 தீவிரம் குறையாத நிலை தொடர்வதாக கருதப்படுவதால் இங்கு லாக் டவுன் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்படும் எனவும் கோதுமை கொள்முதல் சம்பந்தப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு பெற்றுள்ளனர்'' எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிற்பகல் நேரத்தில் பஞ்சாப் மாநிலத்தின் ஃபிரோஸ்பூர் நகரில் சிர்கி பஜார் பகுதியில் சிலர் கடைகளைத் திறக்க முடிவெடுத்தனர். லாக் டவுன் தளர்த்தப்படாத நிலையில் கடைகளைத் திறப்பதைக் கண்ட அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸார் அதைத் தடுத்தனர்.
கடைகளைத் திறப்பதை போலீஸார் தடுத்த நிகழ்வு இரு தரப்பினருக்குமான மோதலாக மாறியது. பின்னர் கூடுதலான போலீஸார் குவிக்கப்பட்டபிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
போலீஸாரை அவர்களது கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் கடை உரிமையாளர்கள் மோதலில் ஈடுபடும் காட்சியை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் ட்விட்டரில் வீடியோவாக வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT