Published : 11 Aug 2015 05:20 PM
Last Updated : 11 Aug 2015 05:20 PM
பிரதமர் நரேந்தர் மோடி ஒவ்வொரு முறை பிஹார் வரும் போதும் தன் மீது வைக்கும் கடும் விமர்சனத்தை தாங்காமல் லாலு பிரசாத் யாதவுடன் பெரிய அளவில் ஒரே பொதுக்கூட்ட மேடை ஏறுகிறார் நித்ஷ்குமார். சுமார் 20 வருடங்களுக்கு பின்பு இருவரும் பங்கேற்கும் இந்த கூட்டம் ஆகஸ்ட் 29-ல் நடைபெற உள்ளது.
சுமார் 25 வருடங்கள் தேசிய ஜனநாயக முண்ணனியின் கூட்டணி உறுப்பினராக இருந்து பிஹாரில் தொடர்ந்து இருமுறையாக ஆட்சியை பிடித்தக் கட்சி ஐக்கிய ஜனதா தளம். இதன் முதல்வரான நிதிஷ்குமார், கடந்த மக்களவை தேர்தலில் தேஜமுவின் பிரதமர் வேட்பாளராக குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்தர மோடி அறிவிக்கப்பட்டதை எதிர்த்து கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து இருவரும் ஒருவர் மீது ஒருவராக கடும் விமர்சனங்கள் செய்து வருகின்றனர். இதில், மோடி கடந்த இருமுறையாக பிஹாரின் பொதுக்கூட்டங்களில் தம் மரபணு பற்றி கூறிய விமர்சனத்திற்கு இன்னும் கூட பதில் அளித்தபடி வருகிறார் நிதிஷ் குமார்.
இதனால், கடுமையான மனத்தாங்கலுக்கு உள்ளானதாகக் கருதப்படும் நிதிஷ், தன் மீது மோடி வைத்த விமர்சனத்திற்கு பதிலடி தரும் பொருட்டு லாலுவின் உதவியை நாட முடிவு செய்துள்ளார். இதற்காக, வரும் ஆகஸ்ட் 29 அன்று மோடி பாட்னாவின் காந்தி மைதானத்தில் சுமார் 20 வருடங்களுக்கு பின்பு பிராம்மாண்டமாக அமைய உள்ள ஒரே மேடையில் லாலுவுடன் பேசுகிறார் நிதிஷ்.
இது குறித்து 'தி இந்து'விடம் ஐக்கிய ஜனதா தளத்தின் நிர்வாகிகள் வட்டாரம் கூறியதாவது:
'பிஹாரில் லாலு நடத்துவது 'காட்டுத் தர்பார்' ஆட்சி என கடும் விமர்சனம் வைத்து முதல்வரானவர் நிதிஷ். பிறகு வேறு வழியின்றி அவருடன் கூட்டணி சேர வேண்டி இருந்தாலும் லாலுவுடன் ஒரே மேடையில் பேசுவதை தவிர்த்து வந்தார். மக்களவை தேர்தலுக்கு பின்பு வந்த இடைத்தேர்தலில் ஒருமுறை சிறிய கூட்டத்தில் லாலுவுடன் மேடை ஏறி இருந்தார். அதில், நிதிஷின் பேச்சு எடுபடாமல் லாலுவின் உரை பெரிதாகப் பேசப்பட்டது.
அதன் பிறகு இப்போது, மோடிக்கு உகந்த பதிலடி கொடுக்க லாலு தான் சரியானவர் என முடிவு செய்துள்ளார் லாலுவுடன் நிதிஷ் கூட்டணி சேர்ந்த பின்பும் அவருடன் ஒரே மேடையில் பேசாததை பாஜகவினரும் விமர்சித்து வந்தனர். எனவே, மோடியுடன் சேர்த்து இதற்கும் பதில் தந்தது போல் இருக்கும். நித்திஷ் இனி, லாலுவுடன் அடிக்கடி ஒரே மேடையில் தோன்ற உள்ளார். எனத் தெரிவித்தனர்.
தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாக பேசும் லாலு, கடுமையான விமர்சனங்களையும் முன் வைப்பதில் வல்லவர் எனக் கருதப்படுகிறார். இவரை போல் அன்றி மோடி மிகவும் உணர்சிகரமாக வைக்கும் கடும் விமர்சனங்கள் சில சமயம் அவருக்கு பாதிப்பையும் ஏற்படுத்தி விடுவதாகக் கருதப்படுகிறது.
இவர் கடந்த வருடம் நடந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளரான அர்விந்த் கேஜ்ரிவாலை, 'துரதிஷ்டசாலி' எனக் கூறியது கடும் விமர்சனங்களுக்குள்ளானது. பிறகு அவர் அதிர்ஷ்டசாலி என்பது போல் தனி மெஜாரிட்டியுடன் முதல் அமைச்சராகி விட்டார். எனவே, தனிப்பட்ட விமர்சனங்களை மோடி தவிர்ப்பது நல்லது என பாஜகவின் மூத்த தலைவர்களுக்கு இடையேயும் ஒரு பேச்சு இருப்பதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT