Published : 19 Apr 2020 07:34 AM
Last Updated : 19 Apr 2020 07:34 AM

நான்கு வார தனிமைப்படுத்துதலை முடித்தவருக்கு கரோனா தொற்று: மருத்துவ உலகுக்கு கேரளத்தில் இருந்து அடுத்த சவால்

திருவனந்தபுரம்

கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டம் எடச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் துபாயில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். அரசு வழிகாட்டுதலின்படி அவர் 4 வாரங்கள் தனிமையில் இருந்து தனித்திருத்தலை நிறைவு செய்தார். இதையடுத்து குடும்பத்தினரிடம் அந்த இளைஞர் நெருங்கிப் பழகத் தொடங்கினார்.

இந்நிலையில், 67 வயதான அவரது தந்தை வழக்கமான வயோதிக பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோது அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து உடனே அவரைத் தனிமைப்படுத்திய மருத்துவர்கள் அவரது வீட்டிலிருந்த மற்றவர்களையும் சோதித்தனர். அப்போதுதான், துபாயில் இருந்து திரும்பி தனிமைப்படுத்துதலை நிறைவு செய்த இளைஞருக்கு அந்த காலம் முடிவடைந்த பிறகும்கூட கரோனா தொற்று இருப்பதும், அதன் சங்கிலித் தொடர்ச்சியாக அவரது பெற்றோர், சகோதரர், மகள் ஆகியோருக்கும் கரோனா தொற்றியிருப்பதும் தெரியவந்தது.

இவ்விவகாரம் குறித்து கேரள மருத்துவர்கள் சிலரிடம் கேட்டபோது, "வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு கரோனா அறிகுறிஇருந்தால் மருத்துவமனையில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அந்த கால அளவுக்குள் அவர்களுக்கு கரோனா தொற்று போய்விட்டால் வீட்டுக்கு அனுப்பிவிடுவது வழக்கம். ஆனால், அவர்கள் வீட்டிலும் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். ஆக, இந்த சுழற்சி 28 நாட்களுக்கானது.

முதல் சம்பவம்

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு எவ்வித அறிகுறியும் இல்லாவிட்டால் நேரடியாக தங்கள் வீட்டிலேயே 28 நாள்கள் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த தனிமைப்படுத்துதல் கால அளவு முடிந்தபின் கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட முதல் சம்பவம் இதுதான். கரோனா விஷயத்தில் நமக்கு புதுப் புது படிப்பினைகளும் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x