Published : 18 Apr 2020 07:01 PM
Last Updated : 18 Apr 2020 07:01 PM
மருத்துவம், பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்காக ராஜஸ்தானின் கோட்டாவில் பெரும்பாலான மாநிலங்களில் இருந்து மாணவர்கள் தங்கி பயில்வது வழக்கம். இவர்களில் அங்கு ஊரடங்கால் சிக்கிய தம் மாநில மாணவர்களை 252 பேருந்துகளை அனுப்பி உத்திரப்பிரதேச அரசு மீட்டு வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா, பல வருடங்களாக ஒரு கல்வி நகரமாக திகழ்ந்து வருகிறது. இதற்கு மருத்துவம், பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கானப் பயிற்சி அளிக்க அங்கு சுமார் 250 தனியார் பயிற்சி மையங்கள் அமைந்திருப்பது காரணம்.
இதில் தமிழகம் உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருடந்தோறும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் தங்கிப் பயிற்சி பெருகின்றனர். இதற்கான கல்விக்கட்டணம் பல லட்சம் ஆகும்.
இந்நிலையில், கரோனாவினால் அமலான ஊரடங்கினால் பல நுழைவுத் தேர்வுகள் தள்ளிப் போகும் நிலை உருவாகி உள்ளது. இதனால், அங்கிருந்து பெரும்பாலான மாணவர்கள் தம் சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர்.
உபி உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த சுமார் 25,000 மாணவர்கள் கோட்டாவில் சிக்கி அவதியுற்று வருகின்றனர். மேலும் அங்கு கொரோனா தொற்றால் இரண்டு உயிர்களும் பலியாகி உள்ளன.
இந்த சூழலில் அங்குள்ள மாணவர்கள் இணைந்து தம் முகநூலில், ‘எங்களை வீட்டிற்கு அனுப்புங்கள்’ எனும் பெயரில் பதிவிட்டு பிரச்சாரம் செய்திருந்தனர். இது வைரலானதை அடுத்து தம் மாநில மாணவர்களை மீட்க உபி அரசு முடிவு செய்தது.
இதற்காக ஆக்ராவில் இருந்து 150 மற்றும் ஜான்சியில் இருந்து 102 என தம் அரசு பேருந்துகளை கோட்டாவிற்கு நேற்று அனுப்பியிருந்தது. இவை அனைத்திலும் முறையாக பூச்சிகொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு அதில் மாணவர்கள் கிளம்பி விட்டனர்.
சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டி அதன் இரண்டு இருக்கைகளுக்கு ஒரு மாணவர் அல்லது மாணவி மட்டுமே அமர வைக்கப்பட்டுள்ளனர். கோட்டாவில் மொத்தம் ஆறு முக்கியப் பகுதிகளில் இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன.
அவற்றில் இதுவரை சுமார் மாணவர் உள்ளிட்ட 8000 பேர் ஏறிச் சென்றுள்ளனர். துவக்கத்தில் நேற்று மாணவர்கள் அல்லாமல் அங்கு பணியாற்றும் உபிவாசிகளும் அவற்றில் ஏறி அமர்ந்து விட்டனர்.
இதனால் எழுந்த சர்ச்சை பிறகு அவர்களையும் அழைத்துச் செல்ல ராஜஸ்தான் மற்றும் உபி அரசிடம் அனுமதி பெறப்பட்டதால் அடங்கியது. இந்தவகையில், நேற்று இரவும், இன்று காலையும் என தலா 100 பேருந்துகள் கிளம்பிச் சென்று விட்டன.
மீதியுள்ள மாணவர்களுடன் 52 பேருந்துகள் நாளை காலை அல்லது இரவில் கிளம்ப உள்ளன. இவை அனைத்தும் உபியின் தலைநகரான லக்னோ, அலகாபாத், கான்பூர், அலிகர் உள்ளிட்ட சில முக்கிய நகரங்களுக்கு செல்கின்றன.
இதற்காக, ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசும் அனுமதி அளித்திருந்தது. மற்ற மாநிலத்தினரும் தம் ஏற்பாடுகளில் அவர்களது மாநில மாணவ, மாணவியரை அழைத்துச் செல்லலாம் எனவும் அம்மாநில முதல்வர் அசோக் கெல்லோட் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT