Published : 17 Apr 2020 12:06 PM
Last Updated : 17 Apr 2020 12:06 PM
வெளிமாநிலங்களில் சிக்கிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இத்தொகை, அவர்கள் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க உதவும் எனவும் கூறியுள்ளார்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் கடந்த 14-ம் தேதி மும்பையின் ரயில் நிலையங்களில் கூடி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். தாங்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்ல போக்குவரத்து ஏற்பாடு செய்யவும் வலியுறுத்தினர்.
இதில் இடம் பெற்றிருந்த பல்வேறு மாநிலங்களின் தொழிலாளர்களில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். அவர்களில் சிலரிடம் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசியில் பேசியுள்ளார்.
அப்போது ஊரடங்கு காலத்தில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வாங்குவதற்கும் தம்மிடம் பணம் இல்லை என அவர்கள் கூறி உள்ளனர். இதைத் தீவிரமாகப் பரிசீலித்த முதல்வர் மம்தா, அவர்களுக்கு ரூ.1000 அளித்துத் தன் அரசு உதவும் என அறிவித்துள்ளார்.
டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 18 மாநிலங்களில் மேற்கு வங்கத் தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு பிழைப்பிற்காக வந்தவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஊரடங்கால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அனைவரும் தங்கள் சொந்த மாநிலம் திரும்ப விரும்புகின்றனர்.
இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, ''எங்கள் மாநிலத் தொழிலாளர்களைச் சிறப்புடன் கவனிக்க வேண்டி மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோருடன் பேசினேன். தொழிலாளர்களைக் காக்கும் பணியில் நானும் உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தேன். இதற்காக அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம்'' எனத் தெரிவித்தார்.
இதனிடையே, மேற்கு வங்க மாநிலத்தில் 16 வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் கூலித் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை 711 முகாம்களில் தங்க வைத்து முதல்வர் மம்தா அரசு உணவளித்து வருகிறது.
ஊரடங்கு நிலையினால் வெளிமாநிலங்களில் சிக்கிய ஏழை மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதைச் சமாளிப்பது அவர்கள் சார்ந்த மாநிலங்களுக்கும் பெரும் சவாலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT