Published : 17 Apr 2020 07:57 AM
Last Updated : 17 Apr 2020 07:57 AM

தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு எழுத படிக்க கற்றுக் கொடுக்கும் உத்தராகண்ட் அரசு ஆசிரியர்கள்

சம்பாவத்

உத்தராகண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் உள்ளது தன்காபூர் பகுதி. கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நூற்றுக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் இங்குள்ள தனி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை அம்மாநில அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட நாட்களை தொழிலாளர்கள் உபயோகமாக பயன்படுத்த வேண்டும் என நினைத்த அப்பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தாமாக முன்வந்து அவர்களுக்கு எழுத, படிக்க கற்றுக் கொடுத்து வருகின்றனர். தற்போது அவர்களில் பெரும்பாலானோர் ஹிந்தி மொழியை நன்றாக எழுதவும் வாசிக்கவும் கற்றுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து நேபாள நாட்டைச் சேர்ந்த பிரதாப் போரா என்ற தொழிலாளர் கூறியதாவது:

நான் நேபாளத்தில் உள்ள கய்லாலி மாவட்டத்தை சேர்ந்தவன். பிழைப்புக்காக உத்தராகண்டில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறேன். 55 வயதாகும் எனக்கு இதுவரை எழுத, படிக்க தெரியாது. வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இத்தனை வயதுக்கு பிறகு நான் எழுத படிக்க கற்றுக்கொள்வேன் என ஒருபோதும் நினைத்ததில்லை. ஆசிரியர்களின் முயற்சியால் இன்று ஹிந்தியில் நன்றாக எழுதவும், வாசிக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னைப் போல நேபாளத்தில் இருந்து வந்தவர்களும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்களும் இங்கு ஹிந்தி மொழியை நன்றாக பயின்று வருகின்றனர் என அவர் கூறினார்.

ஊதியத்தை எதிர்பாராமல் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x