Published : 16 Apr 2020 03:13 PM
Last Updated : 16 Apr 2020 03:13 PM
லாக் டவுன் என்பது பாஸ் பட்டன் போன்றது. அதனால் கரோனாவை ஒழிக்க முடியாது. அது தீர்வும் அல்ல. மக்களுக்கு தீவிரப் பரிசோதனைகள் செய்வதன் மூலமே கரோனாவைக் கட்டுப்படுத்தி ஒழிக்க முடியும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
லாக் டவுனை நீக்கினால், மீண்டும் கரோனா தீவிரமாகப் பரவத் தொடங்கும். ஆதலால் இந்தக் காலத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி காணொலி மூலம் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''தற்போது இருக்கும் காலத்தையும், வளங்களையும் மத்திய அரசு சரியாகப் பயன்படுத்திக்கொண்டு கரோனாவுக்கு எதிராகப் போராட வேண்டும். மாநிலங்களுக்கு உரிய அதிகாரத்தை வழங்க வேண்டும்.
கரோனா வைரஸை ஒழிக்க லாக் டவுனால் முடியாது. லாக் டவுன் என்பது ஒரு பாஸ் பட்டன் போன்றது. லாக் டவுன் தீர்வும் அல்ல. லாக் டவுனை நீக்கிவிட்டால் மீண்டும் கரோனா வைரஸ் பரவும். ஆதலால், மக்களுக்குத் தீவிரப் பரிசோதனைகளைச் செய்வதன் மூலமே கரோனாவை ஒழிக்க முடியும். இந்த லாக் டவுன் காலத்தில் அதற்குரிய திட்டங்களை வகுக்கவேண்டும். லாக் டவுனைப் பயன்படுத்த வேண்டும்.
கரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய அதிமான பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும். பரிசோதனைகள் அளவில் நாம் உலக அளவில் பின்தங்கி இருக்கிறோம். 10 லட்சம் பேருக்கு 199 பேருக்குதான் பரிசோதனை நடத்துகிறோம். ஆதலால் பரிசோதனைகள் அளவை வேகப்படுத்தி, அதிகப்படுத்த வேண்டும்.
கரோனா வைரஸுக்கு எதிரான போரை நாம் மாவட்ட அளவில், மாநில அளவில் கொண்டு செல்ல வேண்டும். பிரதமர் மோடி மாநில அரசுகளுக்கு நிதி வழங்கிட வேண்டும். எவ்வளவு வேகமாக மாநிலங்களுக்குப் பணம் சென்றடைகிறதோ, அந்த அளவுக்குப் பரிசோதனைகள் நடத்துவது வேகமாகும்.
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹாட் ஸ்பாட்களாகவும், பாதிப்பு குறைந்த பகுதிகளை ஹாட் ஸ்பாட் அற்ற பகுதிகளாகவும் அறிவித்து பரிசோதனைகள் நடத்த வேண்டும். மாநில அரசுகளுக்கு அதிகமான அதிகாரங்களை மத்திய அரசு அளிக்க வேண்டும். முதல்வர்களுடன் அடிக்கடி கரோனா குறித்து பிரதமர் ஆலோசிக்க வேண்டும். மாநில அரசுகளே லாக் டவுன் குறித்து முடிவு செய்யும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.
அதேபோல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலனிலும் மத்திய அரசு அக்கறை கொள்ள வேண்டும். அவர்கள் நலனைப் புறக்கணித்து தொடர்ந்து செயல்பட்டால் சமூகத்தில் அமைதியற்ற சூழல் விரைவில் உருவாகிவிடும். அது கரோனாவுக்கு எதிரான போரை வலுவிழக்கச் செய்யும்.
பொருளாதாரத்தின் மீதும் அதிக அக்கறை வைத்துத் திட்டங்களை வகுக்க வேண்டும். இப்போதுள்ள சூழலில் நாம் கரோனா வைரஸுக்கு எதிரான போரைத் தொடங்கியிருக்கிறோம். அதற்குள் வெற்றி பெற்றதாக அறிவிப்பது தவறு.
கரோனா வைரஸை ஒழிக்க "ரேண்டம்" பரிசோதனைகளை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் வைரஸை நாம் பின் தொடர்ந்துதான் செல்வோம். அது உங்களுக்கு முன் சென்று நிற்கும்.
லாக் டவுன் காலத்தில் ஏழைகள், தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களக்கு உணவு வழங்குதல் மிகவும் அவசியம். ஒவ்வொரு வாரமும் ஏழைகளுக்கு 10 கிலோ கோதுமை, அரசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பருப்பு வழங்க வேண்டும்.
கரோனா வைரஸுக்கு எதிரான போரில் ஒற்றுமையாக இருந்து வெல்ல வேண்டும். இதில் நாம் பிரிந்து செயல்பட்டால் நிச்சயம் தோல்வி அடைவோம். கரோனா வைரஸை இந்தியா வெற்றிகரமாக கட்டுப்படுத்திவிட்டால் உலக அளவில் இந்தியாவின் தரம் எங்கேயோ சென்றுவிடும்.
பிரதமர் மோடியுடன் எனக்கு பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஆனால்,அதை வெளிக்காட்ட இது சரியான நேரம் அல்ல. கரோனாவுக்கு எதிராக ஒற்றுமையாகப் போரிட வேண்டிய நேரம்''.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT