Published : 15 Apr 2020 07:53 PM
Last Updated : 15 Apr 2020 07:53 PM
கரோனா ஊரடங்கால் வாரணாசியில் சிக்கிய தமிழர்களில் 127 பேர் 3 பேருந்துகளில் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சுமார் 1800 கி.மீ. தொலைவில் மூன்று மாநிலங்கள் கடந்து நாளை சென்னை சேரும் வாய்ப்புகள் உள்ளன.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட இந்தியாவிற்கு ஆன்மிகச் சுற்றுலா செல்ல பல தமிழர்கள் கிளம்பினர். இவர்களில் சுமார் 400 பேர் தெய்வீக நகரமும் பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியுமான வாரணாசியில் சிக்கினர்.
இவர்களுக்கு வாரணாசியின் குமாரசாமி மடம், நாட்டுக் கோட்டை சத்திரம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் உணவு, தங்குமிடம் அளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டனர். பெரும்பாலும் முதியவர்கள் அதிகமாக இருந்தமையால் தம் வீட்டை விட்டு வெளியில் உள்ளதன் தாக்கம் அதிகம் ஏற்பட்டுள்ளது.
இதனால், மனச்சோர்வு அடைந்தவர்கள் தாங்கள் வீடு திரும்ப உதவ வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதற்காக முன்வந்த வாரணாசி மாவட்ட அரசு நிர்வாகம் அவர்களது பயணச்செலவிலான பேருந்துகளில் செல்ல அனுமதி அளித்தது. இவர்களில் 127 பேர் நேற்று இரவு வாரணாசியில் இருந்து கிளம்பி சென்னை வந்து கொண்டிருக்கின்றனர். வழியில் இறங்க அவர்களில் எவருக்கும் அனுமதி இல்லாததால் பிஸ்கட், பிரெட், குடிநீர் மற்றும் பழவகைகளும் குமாரசாமி மடம் சார்பில் கொடுத்தனுப்பப்பட்டு உள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’இணையத்திடம் சேலம் பயணியான சுவாமி அபயானந்த சரஸ்வதி கூறும்போது, ''தனிமையால் வெறுப்படைந்து சிலர் அவர்களாகவே தங்களுக்குள் புலம்பத் தொடங்கிவிட்டனர். ஊரடங்கிற்குப் பிறகு தமிழகம் திரும்பினால் மேலும் 15 நாட்களுக்குத் தனிமையில் வைக்க நேரிடும். அதை தம் கிராமங்களின் வயல்களிலேயே செய்து கொள்ளலாம் எனக் கிளம்பி விட்டனர்'' எனத் தெரிவித்தார்.
மூன்றில் ஒரு பேருந்து நேற்று நண்பகல் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரைக் கடக்கும்போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டு நின்றுவிட்டது. இதற்கு தமிழரான ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலையீட்டால் உதவி கிடைத்துள்ளது. இதில் பேருந்து சரிசெய்ய உதவியதுடன் 200 சாம்பார் சாதப் பொட்டலங்களில் உணவளித்து ஜபல்பூர் மாவட்ட நிர்வாகம் அனுப்பியுள்ளது. அடுத்து வந்த மகாராஷ்டிராவின் நாக்பூரில் வாரணாசி மடத்தின் பக்தர்களில் சிலர் இரவு உணவு அளித்து உதவினர்.
அம்மாநிலத்தில் இருந்து ஆந்திராவில் நுழையும் முன்பாக சுமார் இரண்டு மணி நேரம் பேருந்தை நிறுத்தி பயணிகள் அமர்ந்தபடியே உறங்கினர். இதன் முதல் பேருந்தில் (UP65AT 9898) சென்னை 8, மதுரை 7, திருப்பூர் 15, ஈரோடு 10, கடலூர் 2 மற்றும் அரியலூர் 3 என மொத்தம் 45 [பேர் உள்ளனர்.
இரண்டாவது பேருந்தில் (UP65BT 7171) நாகப்பட்டினம் 12, அரியலூர் 13, மணப்பாறை 2, நெல்லூர் 6 மற்றும் சேலம் 1 என மொத்தம் 34 பேர் உள்ளனர். மூன்றாவது பேருந்தில் (UP 65BT 2002) உள்ள 45 பேரும் அரியலூரைச் சேர்ந்தவர்கள்.
சென்னை வரையிலான அனுமதியுடன் ஒன்றாகவே வந்துகொண்டிருக்கும் பேருந்துகள் நாளை காலை சுமார் 11 மணிக்கு சேரும் வாய்ப்புகள் உள்ளன. அனைவரையும் இறக்கி விட்டு அம்மூன்று பேருந்துகளும் காலியாகவே வாரணாசி திரும்ப உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT