Published : 15 Apr 2020 04:25 PM
Last Updated : 15 Apr 2020 04:25 PM
உணவு, தங்குமிடத்தோடு எங்கள் பிரச்சினை முடிந்துவிடவில்லை. எவ்வளவோ இருக்கிறது. குழந்தையைக் காணவாவது நாங்கள் ஊர் செல்ல வேண்டும் என்று டெல்லியில் தவித்து வரும் பெண் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கரோனா வைரஸைத் தடுக்க மே 3-ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கை நீட்டிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார். இதனால் கரோனா பரவல் குறையும் என்ற நம்பிக்கை ஒருபக்கம் ஏற்பட்டாலும் இன்னொரு பக்கம் மக்கள் வேலையின்றி பட்டினியால் வாடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்ககை 11,439 ஆகும். இதில் தற்போது 9,756 பேரிடம் இந்நோய் செயலில் உள்ளது. 377 பேர் பலியான நிலையில் 1,305 பேர் குணமடைந்துள்ளனர்.
டெல்லியைப் பொறுத்தவரை 1,561 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இப்போது வரை, 30 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் 30 இறப்புகள் பதிவாகியுள்ளன.
லாக் டவுன் நீட்டிப்பால் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக டெல்லியில் உள்ள பெண் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலைகளில் மற்றும் சில நிறுவனங்களில் தினசரி ஊதியம் பெறும் இந்தப் பெண் தொழிலாளர்கள் நாடு தழுவிய லாக் டவுன் நீட்டிப்பால் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். பல்வேறு அமைப்புகளும் மக்களும் அவர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்க முன்வந்துள்ளனர். எனினும் இது மட்டுமே எங்கள் பிரச்சினையல்ல என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
டெல்லியிலிருந்து 500 கி.மீ. தொலைவில் உ.பி.உள்ள சிறுநகரம்தான் ஜான்சி. ஜான்சி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் தொழிலாளர்களாக டெல்லிக்கு வேலை செய்ய வந்தாலும் அவர்களின் குழந்தைகள் ஊரில் வளர்கின்றனர். கிராமங்களில் உள்ள தங்கள் குழந்தைகளைப் பார்க்கவும் போக முடியவில்லை என்பது அவர்களின் பொதுவான தவிப்பாக உள்ளது.
இப்போது லாக் டவுன் மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவதற்கான நம்பிக்கையை முற்றிலும் இழந்த நிலையில் அவர்கள் மிகவும் சோகத்தோடு காணப்படுகிறார்கள்.
இதுகுறித்து சில பெண் தொழிலாளர்கள் கூறியதாவது:
ஆர்.எம்.எல் குமாரி , ஜான்சி கிராமம் (உ.பி)
நான் டெல்லியில் சரோஜினி நகர் பகுதியில் குடிசைப் பகுதியில் வசிக்கிறேன். தினசரிக் கூலியாக வேலை பார்த்து வந்தேன். இங்குள்ள நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. எங்களிடம் பணம் இல்லாமல் இங்கு தங்கிக்கொண்டு என்ன செய்ய முடியும்? எப்படியாவது, நாங்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவைப் பெறுகிறோம், ஆனால் எவ்வளவு காலம் நாங்கள் இப்படியே இருக்க வேண்டும்?
மல்கி பாய், மொஹோபா (உ.பி)
எங்கள் ஒப்பந்தக்காரர் கிராமத்திற்குச் சென்றுவிட்டதால் எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. எங்களுக்குப் பணம் கூட கிடைக்கவில்லை. இப்போது எங்களுக்கு எதுவும் இல்லை. எங்களுக்கு என்ன செய்வது என்று கூட தெரியவில்லை. எங்களுக்கு கிராமத்தில் சிறு குழந்தைகள் உள்ளனர், காவல்துறையினர் எங்களை கிராமத்திற்குச் செல்ல விடவில்லை. ஒருமுறை நாங்கள் கிராமத்திற்குச் செல்ல முயன்றோம். ஆனால், நாங்கள் திருப்பி அனுப்பப்பட்டோம்.
மீரா, ஜான்சி, சீதாபூர்ம் கிராமம் (உ.பி)
பிரச்சினை என்னவென்றால், லாக் டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போது வேலையில்லாததால் நாங்கள் எங்கள் கிராமத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது. நாங்கள் உணவைப் பெறுகிறோம், ஆனால் எங்களுக்கு வேறு தேவைகளும் உள்ளன. அதற்காக நாங்கள் நிறைய போராட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT