Published : 15 Apr 2020 08:26 AM
Last Updated : 15 Apr 2020 08:26 AM
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் 24-ம் தேதி இரவு, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவித்தார். இதற்கு முன்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து உ.பி.க்கு ஆன்மீக சுற்றுலா வந்தவர்களில் சுமார் 400 பேர் வாரணாசியில் சிக்கிக் கொண்டனர்.
இவர்களுக்கு குமாரசாமி மடம், நாட்டுக்கோட்டை சத்திரம் மற்றும் வாரணாசி மாவட்ட நிர்வாகம் ஆகியவை மூலம் தங்குமிடம், உணவு மற்றும் மருந்துகள் கிடைத்து வந்தன. எனினும், இவர்களில் அதிகமாக இருந்த முதியவர்கள் தனிமை காரணமாக வீடு திரும்ப விரும்பினர்.
இதனிடையே வாரணாசியில் சிக்கிய ஆந்திராவை சேர்ந்த 45 பேர் தனியார் பேருந்து மூலம் வீடு திரும்ப முயன்றனர். கடந்த வாரம் புறப்பட்ட இவர்களை மறுநாள் ம.பி. அரசு தடுத்து திருப்பி அனுப்பியுள்ளது. இதனால் மீண்டும் வாரணாசி திரும்பிய அவர்கள், தங்கள் மாநில மத்திய அமைச்சர் மூலமாக அம்மாவட்ட ஆட்சியர் கவுசல்ராஜ் சர்மாவை அணுகினர். இவர் மூலமாக மற்ற மாநில அரசுகளிடமும் அனுமதி பெற்று அனைவரும் நல்லமுறையில் வீடு திரும்பி விட்டனர்.
இந்த தகவல் அறிந்து, அதே வழியில் எடுக்கப்பட்ட முயற்சியில் 127 தமிழர்களுக்கும் சொந்த ஊர் திரும்ப வாய்ப்பு கிடைத்தது. இவர்களுக்கு வாரணாசியில் உணவகமும் நடத்தும் தமிழரான சங்கர், தனது 3 ஏசி பேருந்துகளை தந்து உதவினார்.
டீசல்செலவை மட்டும் ஏற்றுக்கொண்டு, நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு 127 பேரும் புறப்பட்டனர். இவர்கள் சுமார் 1800 கி.மீ. தொலைவை கடந்து இன்று இரவு அல்லது நாளை சென்னை வந்துசேர வாய்ப்புள்ளது. சென்னையில் மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு தமிழகஅரசு உதவியுடன் இவர்கள் சொந்த ஊர் திரும்ப திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் வாரணாசியில் உள்ள பிரதமர் மோடியின் எம்.பி. தொகுதி அலுவலக வட்டாரம் கூறும்போது, “மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக ம.பி., மகராஷ்டிரா மற்றும் தமிழக அரசு தலைமைச் செயலாளர்களிடம் பேசி சிறப்பு அனுமதி பெற்றப்பட்டுள்ளது. வழியில் எங்கும் நிறுத்தக் கூடாது, வேறு எவரையும் ஏற்றக் கூடாது என்ற நிபந்தனையுடன் காவலர்களுடன் பேருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் எவரையும் கட்டாயப்படுத்தாமல் விரும்பியவர்கள் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழகம் சென்றுள்ள 3 பேருந்துகள் வாரணாசி திரும்பிய பின் அவற்றில் மற்ற தமிழர்களையும் அனுப்பி வைக்க ஏற்பாடு நடைபெறுகிறது. இதேபோன்று வாரணாசியில் சிக்கியுள்ள அண்டை மாநிலத்தவர்களையும் படிப்படியாக அவர்களது ஊருக்கு அனுப்பி வைக்க உபி அரசு திட்டமிட்டு வருகிறது.
இதனிடையே உ.பி. முழு வதிலும் சிக்கியுள்ள அதே மாநிலத் தவர்களை அரசு பேருந்துகள் மூலம் வீடுகளுக்கு அனுப்பிவைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT