Published : 15 Apr 2020 06:58 AM
Last Updated : 15 Apr 2020 06:58 AM

கரோனா வைரஸ் தொற்றை உடனடியாக கண்டறிய 37 லட்சம் விரைவு பரிசோதனை கருவிகளை கொள்முதல் செய்ய மத்திய சுகாதாரத் துறை முடிவு

புதுடெல்லி

கரோனா வைரஸ் தொற்றை உடனடியாக கண்டறியும் வகையில் முதல்கட்டமாக 37 லட்சம் விரைவுப் பரிசோதனைக் கருவிகளை வாங்க மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்ய பிசிஆர் (பாலி மரேஸ் செயின் ரியாக்‌ஷன்) பரி சோதனை நடத்தப்படுகிறது.இதன்படி பாதிக்கப்பட்டவர்களின் தொண்டை, மூக்கில் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு வைரஸ் தொற்று உள்ளதா என்பது கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த பரிசோதனையின் முடிவை அறிய சுமார் 48 மணி நேரம் ஆகிறது.

நாடு முழுவதும் தற்போது கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் 'ஆன்டிபாடி' எனப்படும் விரைவு பரிசோதனையை இந்தியமருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) அறிமுகம் செய்கிறது. இது ரத்தத்தை அடிப்படையாகக் கொண்ட சோதனை. ரத்தத்தில் உள்ள செல்களை நீக்கிய பிறகு 'சீரம்' எனும் திரவம் கிடைக்கும். அதில் ‘ஆன்டிபாடிகள்' இருக்கிறதா என்று சோதித்து அறியப்படும்.

அதாவது, யாருக்காவது நோய் தொற்று ஏற்பட்டிருந்தால் அவர் களது ரத்தத்தில் ‘ஆன்டிபாடிகள்' உருவாகி இருக்கும். இதன்மூலம் அந்த நபர் நோய் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார் என்பதை கண்டறியலாம். இந்த பரிசோதனையில் அரை மணி நேரத்தில் முடிவை அறிந்துகொள்ள முடியும். எனினும் பிசிஆர் பரிசோதனை நடத்திய பிறகே கரோனோ வைரஸ் தொற்றை உறுதி செய்ய முடியும்.

‘ஆன்டிபாடி' விரைவு பரி சோதனைக்காக சுமார் 44 லட்சம்கருவிகளை கொள்முதல் செய்யமத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 5 ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யவும் ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் அதிக பரிசோதனைகளை நடத்த முடியும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய சுகாதாரத் துறை ட்விட் டரில் வெளியிட்ட பதிவில், ‘முதல் கட்டமாக 37 லட்சம் ஆன்டிபாடி விரைவு பரிசோதனைக் கருவிகள் கிடைக்கும். மேலும் 33 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகளை வாங்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 2.31 லட்சம் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. பரிசோதனைகளை நடத்த போது மான கருவிகள் நம்மிடம் உள்ளன என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

ஓரிரு நாளில் சென்னைக்கு வருகிறது

கரோனா வைரஸ் தொற்றை விரைவாகக் கண்டறியும் விரைவு பரிசோதனை கருவிகளை வாங்க சீனாவிடம் தமிழக அரசு ஆர்டர் கொடுத்தது. திட்டமிட்டபடி ஏப்ரல் 9-ம் தேதி கருவிகள் வரவில்லை. இதனால், திட்டமிட்டபடி விரைவு பரிசோதனை தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘தமிழகத்தில் தற்போது 16 அரசு மருத்துவமனைகளிலும், 9 தனியார் ஆய்வகங்களிலும் பிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. விரைவான பரிசோதனைக்கு 50 ஆயிரம் விரைவு பரிசோதனை கருவிகள் வாங்க முதலில் சீனாவிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டது. சில காரணங்களால் கருவிகள் வரவில்லை. இதுவரை மொத்தம் 4 லட்சம் கருவிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் முதல்கட்டமாக 1 லட்சம் கருவிகள் வந்துவிடும். இதேபோல, 1 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகளும் வருகிறது. முதல்கட்டமாக சுமார் 50 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x