Published : 14 Apr 2020 06:15 PM
Last Updated : 14 Apr 2020 06:15 PM
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பரிசோதனை நடத்துவதுதான் கரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய ஆயுதம். ஆனால் நம் நாடு அந்தக் கட்டத்திலேயே இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளைக் கடுமையாக அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை 19 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.1.20 லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸைத் தடுக்க மத்திய அரசு மிகப்பெரிய, அசாத்தியமான நடவடிக்கை எடுத்தால்தான் கட்டுப்படுத்த முடியும். இல்லாவிட்டால் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
கரோனா வைரஸுக்குப் பின் மிகப்பெரிய பொருளாதாரச் சீரழிவையும் இந்தியா எதிர்கொள்ளப் போகிறது. அதையும் சமாளிக்கும் வகையில் திட்டமிடல் அவசியம். ஏழைகளின் கைகளில் பணப் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார்.
நாடு முழுவதும் லாக் டவுன் செய்வதுதான் சிறந்த வழி. உடனடியாக அந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். அதன்படி முதல் கட்ட லாக் டவுன் மார்ச் 25 முதல் இன்று வரை 21 நாட்கள் முடிந்தன. 2-வது கட்டமாக லாக் டவுன் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகள் எடுத்தும் பாதிப்பின் தீவிரம் குறையவில்லை. இதுகுறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் புதிய யோசனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் போரில் முக்கியமான ஆயுதம் அதிகமான மக்களுக்குப் பரிசோதனை நடத்துவதுதான். ஆனால் இன்னும் பரிசோதனை விஷயத்தில் பின்தங்கியே இருக்கிறோம்.
இந்தியா பரிசோதனைக் கருவிகளை வாங்குவதில் தாமதித்து வருகிறது. இதனால், வருங்காலத்தில் கருவிகளுக்குப் பற்றாக்குறை ஏற்படலாம். இப்போது இருக்கும் கருவிகள்படி 10 லட்சம் இந்தியர்களில் வெறும் 149 பேருக்கு மட்டுமே பரிசோதனை நடத்தி வருகிறோம்.
10 லட்சம் மக்களில் 157 பேருக்கு லாவோஸ் நாடு பரிசோதனை நடத்துகிறது. நைஜீரியா 182, ஹோண்டுராஸ் 162 பேருக்குப் பரிசோதனை நடத்துகிறது, இந்த நாடுகளுடன்தான் இந்தியாவும் இப்போது இருக்கிறது. மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பரிசோதனை நடத்துவது அவசியம். தற்போது இந்த பரிசோதனை நடத்தும் விளையாட்டியேலே நாம் இல்லை”.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையின்படி கடந்த பிப்ரவர் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை இந்தியாவில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 553 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சராசரியாக நாள் ஒன்றுக்கு 3,021 பரிசோதனைகள் மட்டுமே நடக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி மற்றொரு ட்வீட்டில் கூறுகையில், “ நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக ஊரடங்கு கொண்டுவருவதால் ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள். விவசாயிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தினக்கூலிகள், வர்த்தகம் செய்வோர் வேதனைக்குள்ளாகிறார்கள்.
இதை நாம் மேம்படுத்துவது அவசியம். அதாவது மக்களுக்கு மிகப்பெரிய அளவில் கரோனா பரிசோதனை நடத்தி ஹாட்ஸ்பாட் இடங்களைக் கண்டறிந்து அதை ஒதுக்க வேண்டும். பாதிப்பு இல்லாத மற்ற இடங்களில் படிப்படியாக பொருளாதாரச் செயல்பாடுகள் நடத்த அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT