Published : 14 Apr 2020 10:48 AM
Last Updated : 14 Apr 2020 10:48 AM
நாட்டில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது என்பதால், அதைக் கட்டுப்படுத்த மே 3-ம் தேதிவரை ஊரடங்கு நாடுமுழுவதும் நீட்டிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி இன்று அறிவித்தார். இதன் மூலம் ஊரடங்கு மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல்கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். அந்த 21 நாட்கள் இன்றுடன் முடிகிறது. ஆனாலும் கரோனா வைரஸின் தாக்கம் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளார்கள்.
ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கடந்தவாரம் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பெரும்பாலான முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினர். பிரதமர் மோடி அறிவிக்கும் முன்பே தமிழகம் உள்பட 7 மாநிலங்கள் ஏப்ரல்30-ம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்துள்ளன.
இந்நிலையில் பிரதமர் மோடி ஊரடங்கு நீட்டிப்பது குறித்து மக்களுக்கு இன்று 25 நிமிடங்கள் உரையாற்றினார். அவர் பேசியதாவது:
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் இருப்பதை நான் அறிகிறேன். வீட்டுக்குள்ளே இருப்பதாலும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகிறீர்கள். கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் ஒழுக்கத்தையும், தியாகத்தையும் வெளிப்படுத்தி போர் வீரர்கள் போல் செயல்பட்டு வருகிறார்கள். அதற்கு நான் தலை வணங்குகிறேன்.
கரோனா வைரஸ் நாடுமுழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அடுத்தவரும் வாரம் மிகவும் முக்கியமானது. வரும் நாட்களில் லாக்டவுன் மிகவும் தீவிரமாக கடைபிடிக்கப்படும், விதிமுறைகள் கடுமையாக்கப்படும்.
வரும் 20-ம் தேதிவரை லாக்டவுன் கடுமையாக்கப்படும். அதன்பின் கரோனா வைரஸ் பரவல் அதிகம் இல்லாத இடங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்காக சில தளர்வுகள் செய்யப்படும். அந்த வழிகாட்டி நெறிமுறைகள் பற்றி நாளை விரிவாக அறிவி்க்கப்படும்
ஒற்றுமையான அணுகுமுறையால் இந்தியா கரோனா வைரஸை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி வருகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வகையில் 21 நாட்கள் லாக்டவுனால் நாம் பெரிய பயனைப் பெற்றுள்ளோம், குறைவான வளங்களுடன் சூழலை சிறப்பாக எதிர்கொண்டோம்
பல மாநிலங்களில் இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் மிகுந்த ஒழுக்கத்துடன் புத்தாண்டை வீட்டுக்குள்ளேயே கொண்டாடி வருகிறார்கள். அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.
நாம் சமூக விலகல், ஒழுக்கம், லாக்டவுன் மூலம் கரோனா தொற்றை கட்டுப்படுத்தியுள்ளோம். வரும் நாட்கள் மிகவும் முக்கியமானது, கரோனா கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கையில் லாக்டவுன் முக்கியம் என்பதால் வரும் மே 3-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT