Published : 14 Apr 2020 07:17 AM
Last Updated : 14 Apr 2020 07:17 AM
நாடாளுமன்றத்தின் மக்களவையில் 543, மாநிலங்களவையில் 245 என மொத்தம் 788 எம்.பிக்கள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் வருடம் ஒன்றுக்கு ரூ.5 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக மத்திய அரசு ஒதுக்குகிறது.
இதன் இரண்டு வருடங்களுக்கான மொத்த தொகை சுமார் ரூ.7,880 கோடி. இந்த மதிப்பிலான தொகையை கரோனா பாதிப்பு காரணமாக 2020-21 மற்றும் 2021-22 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களும், எம்.பி.க்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, மத்திய புள்ளியியல் மற்றும் திட்டஅமலாக்கத் துறையின் மார்ச் 5, 2020-ன் கணக்கெடுப்பு 17-வது நாடாளுமன்ற எம்.பிக்களுக்கு பதிவாகி உள்ளது.இதன்படி, 2019-20-ம் ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி
ரூ.5,275.24 கோடி செலவிடப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை 15 மற்றும் 16-வது நாடாளுமன்ற எம்.பி.க்களின் நிதியை கணக்கிட்டால் தற்போதைய தொகையை விட 200 சதவிகிதத்துக்கும் அதிகமாக செலவிடப்படவில்லை. இதை விட பல மடங்கு அதிகமான தொகையை, 14-வது நாடாளுமன்ற எம்.பி.க்கள் செலவிடாமல் தவிர்த்துள்ளனர்.
5 ஆண்டு தொகை
வழக்கமாக ஒரு எம்.பி தனது முதல் வருடத்தில் செலவிட முடியாத தொகை அவரது அடுத்த வருடக் கணக்கில் சேர்ந்து விடும். இவ்வாறு அவர் தனது ஐந்து வருடங்களுக்கானத் தொகையை தம் பதவி காலாவதியாவதற்குள் செலவிடலாம்.
தற்போதைய 17 -வது நாடாளுமன்றத்தில் 2019-20-ம் ஆண்டுக்கான நிதியில் பல எம்.பி.க்கள் பாதி மட்டுமே செலவிட்டுள்ளனர்.
இதற்கு அவர்களது பதவி ஏற்பு கடந்த ஜுன் மாதம் என தாமதமாக நடைபெற்றது காரணம் ஆகும். இவர்கள் பதவி ஏற்பிற்கு பின் இந்த தொகுதி மேம்பாட்டு நிதி செயல்பாட்டுக்கு வர எம்.பி,மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு இடையிலான சில கடிதப் போக்குவரத்துகளும் அவசியம் ஆகும். இதில் ஏற்படும் தாமதத்தின் பாதிப்பும் தொகுதி மேம்பாட்டு நிதிஅமலுக்கு வருவதில் ஏற்பட்டுள்ளது.
நிதியை ரத்து செய்ய திட்டம்
இது குறித்து ’இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய புள்ளியியல்மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “புதிதாகத் துவங்கி விட்ட 2020-21-ம் ஆண்டுக்குஅதன் எம்.பி.க்கள் ரூ.1,518 கோடியை செலவிட ஒதுக்கியுள்ளனர். இதில் துவக்கப்படாத திட்டங்களின் நிதியை ரத்து செய்யத் திட்டமிட்டுள்ளோம். கரோனா நிதிசிக்கலால், 2019-20-ம் ஆண்டில் செலவிடாத சுமார் ரூ.5,000 கோடியையும் அந்த எம்.பி.க்களின் அடுத்த கணக்காண்டுகளில் சேர்க்காமல் இருக்கவும் அரசு ஆலோசித்து வருகிறது’ எனத் தெரிவித்தன. ஆர்.ஷபிமுன்னா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT