Published : 13 Apr 2020 01:39 PM
Last Updated : 13 Apr 2020 01:39 PM
தேசம் முழுவதும் கரோனா வைரஸ் உலுக்கி எடுத்து வரும் நிலையில், கேரள மாநிலம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுடன் கரோனாவை பாதிப்பை மெல்லக் குறைத்து வருகிறது.
இது தொடர்பாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஷைலஜா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்தாவது:
''கேரள மாநிலத்தில் நேற்று ஒரு நாளில் 2 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் 36 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிகமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் 179 பேருடன் கேரள மாநிலம் 2-ம் இடத்தில் இருக்கிறது.
நாட்டிலேயே முதன்முதலாக கரோனாவால் பாதிக்கப்பட்டது கேரள மாநிலம்தான். சீனாவின் வூஹான் நகரிலிருந்து வந்த கேரள மாணவிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளித்து குணமானார். அதன்பின் கரோனா வைரஸ் வீரியமாக பரவத் தொடங்கியபின் கேரளாவிலும் வேகமாக வைரஸ் பரவல் இருந்தது.
ஆனால், ஒருகட்டத்துக்கு மேல் கேரள மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைந்த அளவில் அதிகரிக்கத் தொடங்கியது. இதுவரை கேரள மாநிலத்தில் கரோனா வைரஸால் 376 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் கரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது காசர்கோடு மாவட்டம். அங்கு 97 பேரும், கண்ணூரில் 42 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இரு மாவட்டங்களுக்கும் அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
கண்ணூர், பத்தினம்திட்டா மாவட்டங்களில் நேற்று இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவோர் எண்ணி்கை 194 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட இருவரும் துபாய், சுவுதி அரேபியாவிலிருந்து வந்தவர்கள்.
கேரளாவில் நேற்று குணமடைந்த 36 பேரில் 28 பேர் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மலப்புரத்தைச் சேர்ந்தவர்கள் 6 பேரும் கோழிக்கோடு, இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரும் குணமடைந்தனர்.
மாநிலத்தில் இதுவரை 1.16 லட்சம் பேர் கண்காணிப்பிலும், 816 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கண்காணிப்பிலும் உள்ளனர். இதுவரை கேரள மாநிலத்தில் 14,989 மாதிரி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 18,691 கரோனா முகாம்களில் 3,36,436 பேர் பணியாற்றி வருகின்றனர்''.
இவ்வாறு அமைச்சர் ஷைலஜா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT