Published : 13 Apr 2020 12:05 PM
Last Updated : 13 Apr 2020 12:05 PM
கரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வருவதையடுத்து, தெலங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி வரை லாக் டவுனை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா, மகாராஷ்டிா, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்கள் லாக் டவுனை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ள நிலையில் 6-வது மாநிலமாக தெலங்கானாவும் அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவும் வேகத்தைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25-ம் தேதி நாடு முழுவதும் 21 நாட்கள் லாக் டவுனை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த லாக் டவுனின்போது மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி வெளியே செல்லத் தடை விதிக்கப்பட்டது. இந்த லாக் டவுன் காலம் நாளை(14-ம் தேதி) முடிவடைகிறது.
லாக் டவுனை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி, கடந்த சனிக்கிழமை அனைத்து முதல்வர்களுடனும் காணொலிக் காட்சி மூலம் ஆலோசித்தார். அப்போது கரோனா வைரஸ் பரவுவது இன்னும் கட்டுக்குள் வராததால், லாக் டவுனை 30-ம் தேதிவரை நீட்டிக்க அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும் பிரதமரிடம் வலியுறுத்தியதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் இதுவரை லாக் டவுன் நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இருப்பினும் மாநில நலன்களைக் கருத்தில்கொண்டு இதுவரை 5 மாநிலங்கள் லாக் டவுனை 30-ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளன. இதில் தற்போது தெலங்கானாவும் சேர்ந்து லாக் டவுனை நீட்டித்துள்ளது.
தெலங்கானாவிலும் கரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வருகிறது. நேற்று 2 பேர் உயிரிழந்தனர். 28 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டனர். இதனால் தெலங்கானாவில் உயிரிழப்பு 16 ஆகவும், பாதிப்பு 531 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் லாக் டவுனை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் வெளியிட்ட அறிவிப்பில், “உலக அளவில், தேசிய அளவில், தெலங்கானா மாநில அளவில் பார்க்கும்போது கரோனா வைரஸ் பரவும் வேகம் குறையவில்லை, அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை கூட கரோனா வைரஸ் பாதிப்பு மாநிலத்தில் அதிகரித்துள்ளது. ஆதலால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வீட்டுக்குள் இருக்க வேண்டும்.
கரோனா வைரஸைத் தடுக்கும் முயற்சியி்ல் மாநில அரசு தீவிரப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆதலால் லாக் டவுனை வரும் 30-ம் தேதிக்கு நீடித்து முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளர். அண்டை மாநிலமாக மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மோசமாக இருந்து வருகிறது.
இதைக் கருத்தில்கொண்டுதான் லாக் டவுன் நீட்டிக்கப்படுகிறது. மக்கள் வெளியே சென்றால் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும், அதீதமான சுத்தத்தைக் கையாள வேண்டும். யாருக்கேனும் உடல்நலனில் சந்தேகம் இருந்தால் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT