Published : 12 Apr 2020 11:37 AM
Last Updated : 12 Apr 2020 11:37 AM
“ என் மாநிலத்துக்கான விழிப்புணர்வு வீடியோ, எனது சொந்த தொழிலே தையல் தானே எதற்காக நடிக்கணும். உண்மையாகவே தைக்கிறேன்” என்று கூறி லுங்கி, சாதாரண சட்டையுடன் சிறை வளாகத்துக்கு சென்று முகக்கவசம் தைக்கும் காணொலியில் நடித்துக் கொடுத்துள்ளார் பல விருதுகள் பெற்ற மலையாள நடிகர்.
கரோனா வைரஸ் தொடர்பாக, வீட்டிலேயே முகக்கவசத்தை எளிமையாக தைப்பது தொடர்பான விழிப்புணர்வு வீடியோவில் கேரள அரசு சார்பில் நடிக்கக் அந்த நடிகரிடம் கேட்கப்பட்டது. அவரும் மறுக்காமல் முகக்கவசத்தை எவ்வாறு வீட்டியில் எளிமையாகச் செய்வது என்பதை நடிக்காமல், உண்மையாகவே முகக்கவசத்ைத செய்து காண்பித்தார்
500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர், பின்னணிப் பாடகர், ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியவர், கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதுகளை 2முறையும், வெளிநாட்டு விருதுகளையும் வென்றவர் இந்த நடிகர்..
அவர் வேறு யாருமல்ல நடிகர் இந்திரன்ஸ்.
தமிழிலில் சங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் திரைப்படம், ஆடும் கூத்து ஆகிய திரைப்படங்களில் மட்டுமே நடத்திருந்தாலும், மலையாளத்தில் இந்திரன்ஸ் பற்றி தெரியாத ரசிகர்கள் இருக்க முடியாது.
இவர் நடித்த “கதாவஷீஸன்”, “அப்போத்தேகரே”, “ஆலோருக்கும்”, “வெயில்மரங்கள்” போன்ற திரைப்படங்கள் இந்திரன்ஸ்க்கு விருதுகளைப் பெற்றுக்கொடுத்து, மக்களிடம் கொண்டு சேர்த்தன.
500 திரைப்படங்களுக்கு மேல் சிறிய நகைச்சுவைப் பாத்திரங்களிலும், குணசித்திர வேடங்களிலும் நடித்தும் மக்களிடம் அறியப்படாத நடிகராக இருந்தவர், இந்த விருதுபெற்ற திரைப்படங்கள் மூலம் மக்களால் அறியப்பட்டார்.
ஆனால் இப்போது இந்திரன்ஸ் நடித்துள்ள விழிப்புணர்வு வீடியோ கேரள மக்களின் மனங்களில் இந்திரன்ஸை கொண்டு சேர்த்துள்ளது.
இந்திரன்ஸ் நடித்து கேரள அரசு சார்பில் வெளியிடப்பட்ட 4 நிமிடங்கள் ஓடக்கூடிய “பிரேக் த செயின்” எனும் விழப்புணர்வு வீடியோ, பெரும் வரவேற்பைப் பெற்று லட்சக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது.
நட்சத்திர நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான் உள்ளிட் நடிகர், நடிகைகள் இந்திரன்ஸின் வீடியோவை தனது ஃபேஸ்புக், ட்விட்டரில் பகிர்ந்து அதுவும் லட்சக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கேரள மாநிலத்தில் ஜூன் மாதம் வரை அனைத்து மக்களும் முகக்கவசம் அணிவதை மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆனால் மாநிலத்தில் மக்களின் தேவைக்கு ஏற்றா்போல் முகக்கவசம் கிடைக்கவில்லை. விலையும், அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இதையடுத்து, கேரள அரசின் சமூகப்பாதுகாப்பு இயக்கத்தின் இயக்குநர் முகமது அஷீல், இந்திரன்ஸைத் தொடர்பு கொண்டு, வீட்டிலேேய எளிய முறையில் முகக்கவசம் தைப்பது தொடர்பான வீடியோவில் நடித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமா எனக் கேட்டுள்ளார்.
அப்போது இந்திரன்ஸ், “ நான் ஏன் இந்த வீடியோவில் நடிக்கணும், என் மாநிலத்துக்கான விழிப்புணர்வு வீடியோ, தையல் எனது சொந்த தொழில். அதைச் செய்வதற்கு எதற்காக நான் நடிக்கணும். உண்மையாகவே தைக்கிறேன்” எனக் கூறி திருவனந்தபுரத்தில் உள்ள பூஜாபுரா மத்திய சிறைக்கு லுங்கியும், சாதாரண சட்டையுமாக வந்து முகக்கவசம் தைக்கும் பணியில் ஈடுபட்டார்.
இந்திரன்ஸ் முகக்கவசத்துடன் இருந்ததால், கைதிகள் யாருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை. விழிப்புணர்வு வீடியோவில் இந்திரன்ஸ் செயல்விளக்கம் காண்பித்து முகக்கவசம் தைக்க எவ்வளவு துணி தேவை, அளவு என்ன, எவ்வாறு தைப்பது தொடர்பாக பேசியபோதுதான் அனைவருக்கும் தங்களுடன் இருந்தது இந்திரன்ஸ் என்பது தெரிந்தது.
தன்னுடைய அனுபவம் குறித்து இந்திரன்ஸ் கூறுகையில், “ கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் போரில் கொண்டு வரப்பட்டுள்ள லாக்டவுன் வரும் 14ம் தேதி முடிந்தபின் முகக்கவசத்துக்கு மிகப்பெரிய தேவை ஏற்படும். அனைவரும் வீட்டை விட்டு வெளியேறும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படலாம்.
பணம் செலவு செய்து முகக்கவசத்தை கடையில் வாங்குவதற்குப் பதிலாக, வீட்டில் இருக்கும் துணியைக் கொண்டு எளிமையான முகக்கவசத்தைத் தைக்கலாம். இதற்கு சிறிதளவு தையல் குறித்த புரிதல் இருந்தால் போதுமானது, தையல் எந்தி்ரத்தை பயன்படுத்தவும் குறைந்தளவு தெரிந்திருத்தால் போதுமானது.
இந்த விழிப்புணர்வு வீடியோவில் நடிக்க வேண்டும் என அரசு அதிகாரிகள் கோரினார்கள். ஆனால் எனக்கு தெரிந்த தொழிலை செய்ய நான் ஏன் நடிக்க வேண்டும். நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் உண்மையாகவே முகக்கவசம் தைக்கிறேன் என்று நானே முகக்கவசத்தைத் தைத்தேன்.
அதைத்தான் வீடியோவாக எடுத்தார்கள். இப்போது அனைவருக்கும் தேவை வீட்டில் இருப்பதும், சமூக விலகலைக் கடைப்பிடித்து கரோனா சங்கிலை உடைப்பதுதான் பணி ” எனத் தெரிவித்தார்
திருவனந்தபுரம் அருகே குமாரபுரத்தைச் சேர்ந்தவர் இந்திரன்ஸ். இவரின் இயற்பெயர் சுரேந்திரன் கொச்சுவேலு என்கிற இந்திரன். 7 குழந்தைகளில் 2-வது நபராகப் பிறந்தவர். பள்ளிக்கல்வியை குமாரபுரத்தில் முடித்து,திருவனந்தபுரம் கல்லூரில் எம்.எஸ்சி. மைக்ரோபயாலஜி முடித்தார்.
படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் தனது மாமாவுடன் சேர்ந்து டெய்லர் வேலையைக் கற்று அதை செய்யத் தொடங்கினார். காலப்போக்கில் நாடகங்களில் நடித்து மலையாளப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும், பின்னர் நடிகராகவும் மாறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT