Published : 12 Apr 2020 07:14 AM
Last Updated : 12 Apr 2020 07:14 AM
ஜமாத்துக்கு வந்து டெல்லியில் தங்கிவிட்ட விருத்தாச்சலத்தை சேர்ந்தவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவருடன் ஒரே மருத்துவமனையில் இருந்தும் தந்தையை பார்க்க முடியாத நிலை மகனுக்கு ஏற்பட்டுள்ளது.
விருத்தாச்சலத்தின் தாஷ்கண்ட் நகரை சேர்ந்தவர் எம்.மஜீத் முஸ்தபா(69). இவர் தன் மகன் ரஹமத்துல்லாவுடன்(49) டெல்லியில் தப்லீக்-எ-ஜமாத்தின் மர்க்கஸுக்கு வந்திருந்தார். ஊரடங்குக்குப் பின்பும் தங்கிவிட்டவர்களை நிஜாமுதீனின் மர்க்கஸ் காலிசெய்யப்பட்ட போது, மார்ச் 31-ல் டெல்லியின் தீன் தயாள் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்கு இருவரும் அனுமதிக்கப்பட்டனர். இங்கு இருவருக்கும் மூன்று வகையான பரிசோதனை நடைபெற்றுள்ளது.
இதன் வெளிப்பாடாக, ஏப்ரல் 7,மாலையில் அருகிலுள்ள லோக்நாயக் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர். மறுநாள், மஜீத்தின் உடல்நிலை குன்றிவிடவே அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு ஏப்ரல் 9-ம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு உயிரிழந்துள்ளார்.
இந்த தகவல் மகன் ரஹமத்துல்லாவுக்கு மறுநாள் அதிகாலை தெரிவிக்கப்பட்டது. அவரிடம் குடும்பத்தாரின் தொடர்பு எண்களும் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக தொடர்பு கொள்ளப்பட்டது. இதில், மஜீத்தின் உடலை டெல்லியிலேயே நல்லடக்கம் செய்து விடும்படி அவரது மனைவி ஜமால்தி நேற்று முன்தினம் விருத்தாச்சாலம் ஆட்சியர் அலுவலகம் மூலமாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மஜீத்தின் உடலை டெல்லியின் முஸ்லிம் இடுகாட்டில்(கபரஸ்தான்) நல்லடக்கம் செய்யும் பணியை டெல்லி அரசு தொடங்கி உள்ளது. அதே மருத்துவமனையில் இருந்தும் மஜீத்தின் மகன் ரஹமத்துல்லாவால் மறைந்துவிட்ட தந்தையின் உடலை காண முடியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. தீன் தயாள் மருத்துவமனையில் இருந்த வந்த நாள் மாலை 7 முதல் இரவு 10 மணி வரை மட்டும் இருவரும் ஒன்றாக இருந்திருக்கிறார்கள்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேடு சார்பில் தொலைபேசியில் ரஹமத்துல்லாவை தொடர்புகொண்ட போது, ‘அவசர சிகிச்சை பிரிவுக்கு மாறிய தந்தையை நான் கண்ணாடி வழியாக சில நிமிடங்கள் நின்று பார்க்க முடிந்ததே தவிரப் பேச முடியவில்லை. அவர் இறக்கும் நாளில் படுக்கையில் இருந்தவரை பின்புறத்தில் இருந்து மட்டுமேபார்த்து கண்ணீர் விட முடிந்தது. எனது மேல்தளத்தில் மறைந்தவரை நேரில் கண்டு அஞ்சலிகூட செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.
கடந்த மார்ச் 19-ல், தன் மகனுடன் சென்னையில் இருந்து திருக்குறள் எக்ஸ்பிரஸில் கிளம்பி டெல்லி வந்துள்ளார் மஜீத். இவர், தமிழக அரசின் தொழுநோய் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி 2009-ல்ஓய்வு பெற்றவர். மஜீத்திற்கு மனைவி, 5 மகன், 4 மகள் உள்ளனர். குழந்தைகள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. டெல்லியின் மர்க்கஸிற்கு வந்ததில் இறந்த தமிழர்களில் மூன்றாவது நபராகி விட்டார் மஜீத். இதனிடையே, ரஹமத்துல்லாவுக்கு கரோனாவுக்காக நடந்த 2 மருத்துவப் பரிசோதனையிலும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT