Published : 11 Apr 2020 01:21 PM
Last Updated : 11 Apr 2020 01:21 PM

ம.பி.யில் ரிலையன்ஸ் அனல்மின் ஆலையில் உள்ள உலைச்சாம்பல் குளத்தின் தடுப்புச் சுவர்உடைந்தது: இருவர் பலி, விவசாய நிலங்கள் நாசம்

சிங்ரவ்லி ரிலையன்ஸ் அனல்மின் நிலையத்தின் உலைச்சாம்பல் குழம்பு தேக்கத் தடுப்புச் சுவர் உடைந்து வெளியேறும் காட்சி.| படம்: சிறப்பு ஏற்பாடு.

மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ரவுலியில் ரிலையன்ஸின் மிகப்பெரிய மின் திட்டத்தின் உலைச்சாம்பல் குளத்தின் தடுப்புச் சுவர் உடைந்து சாம்பல் குழம்பு கசிந்ததில் 2 பேர் பலியாகியுள்ளனர். 4 பேரைக் காணவில்லை. சாம்பல் கசிவு ஏக்கர் கணக்கில் விளைநிலங்களை பாதித்துள்ளது.

சிங்ரவ்லி மாவட்ட கலெக்டர் கே.வி.எஸ். சவுத்ரி கூறும்போது, “ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தினால் உடைப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் கிராமங்கள் எதுவும் நேரடியாக பாதிக்கப்படவில்லை. சாம்பல் குழம்பு ஒரு கால்வாய் வழியாக ரிஹாந்த் அணைக்கட்டுக்குச் சென்றது” என்றார்.

உடைப்பு நடந்த இடத்திலிருது சிறிது தூரம் தாண்டி இருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. “தேசிய பேரிடர் கட்டுப்பாட்டுக் குழுவினர் 30 பேர் வாரணாசியிலிருந்து சென்று காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றார் கலெக்டர் சவுத்ரி.

இந்த சாம்பல் குளத்துக்கு அருகில் இருந்த வீடுகளில் இருந்தவர்கள் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மின் திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வாங்கித் தர ஏற்பாடு செய்யப்படும் என்றார் கலெக்டர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட கிராமத்தினருக்கு புகலிடம் அளித்து உணவு அளிக்குமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூர்வாசி ஒருவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும் போது, “ரிலையன்ஸ் ஆலை முன்பாக 3 மாதங்களுக்கு முன்பு நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதில் உடைப்பு ஏற்படலாம் என்று நாங்கள் எச்சரித்தோம். ரிலையன்ஸ் நிறுவனம் எழுத்துப்பூர்வமாக உடையாது என்று உறுதி அளித்தனர். நிர்வாகமும் சரிபார்த்தது” என்றார்.

இது முதல்முறையல்ல கடந்த அக்டோபர் என்.டி.பி.சி பிளாண்ட் அருகே இதே போன்ற உடைப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தடுப்புகளை வலுப்படுத்துமாறு அனல் மின் நிலையங்கள் அனைத்துக்கும் உத்தரவிட்டார்.

-சித்தார்த் யாதவ், தி இந்து ஆங்கிலம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x