Published : 11 Apr 2020 12:10 PM
Last Updated : 11 Apr 2020 12:10 PM
தப்லீக் ஜமாத்தின் மாநாட்டிற்குச் சென்று வந்தவர்களில் இன்னும்கூட அரசிடம் முன்வந்து தகவல் அளிக்காமல் உள்ளனர். இவர்களைப் பற்றிய தகவல் தருவோருக்கு ரூ.5000 பரிசு அளிப்பதாக உ.பி.யின் ஆசம்கரின் காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அறிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் பாதிப்பு சர்வதேச அளவில் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் பரவி விட்டதன் பின்னணியில் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத்தின் மாநாடும் இடம் பெற்றுள்ளது. இதனால் மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள் மீது நாடு முழுவதிலும் அதிக கவனம் காட்டப்பட்டு வருகிறது. இவர்களுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து உகந்த வகையில் சிகிச்சை அல்லது தனிமைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
எனினும், டெல்லியில் இருந்து திரும்பியவர்களில் இன்னும் கூட அதை வெளிப்படையாக வந்து அரசிடம் கூறாமல் உள்ளனர். இதுபோல், உண்மையை மறைப்பவர்களை அடையாளம் காண உ.பி.யில் ஒரு வித்தியாசமான முயற்சி எடுக்கப்படுகிறது.
இதன்படி, மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.5000 ரொக்கம் பரிசளிப்பதாக ஆசம்கரின் எஸ்.பி.யான திரிவேணிசிங் அறிவித்துள்ளார். தகவல் அளிப்பவர்கள் பெயர்களை ரகசியமாக வைப்பதாகவும் அதில் தைரியம் அளித்துள்ளார்.
உ.பி.யின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள ஆசம்கர், தெய்வீக நகரமும், பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியுமான வாரணாசியின் எல்லையில் அமைந்துள்ளது. முஸ்லிம்கள் அதிகம் நிறைந்த ஆசம்கரில் இதுவரை மாநாட்டில் இருந்து திரும்பியவர்கள் எண்ணிக்கை 38 எனப் பதிவாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT