Published : 10 Apr 2020 08:28 PM
Last Updated : 10 Apr 2020 08:28 PM
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயுடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.
கரோனா தொற்று காரணமாக, உலக சுகாதாரத்துக்கும், பொருளாதாரத்துக்கும் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண தத்தமது நாடுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.
தற்போதைய நெருக்கடியான சூழலில், இரு நாடுகளிலும் பரஸ்பரம் தங்கியிருக்கும் மக்களுக்கு வழங்கப்படும் ஆதரவை இருதலைவர்களும் வரவேற்றதுடன், இத்தகைய ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்க உறுதியளித்தனர்.
பெருந்தொற்று காரணமாக எழுந்துள்ள சவால்களுக்கு தீர்வுகளைக் காண உலகுக்கு உதவுவதில், இந்தியா-ஜப்பான் கூட்டுறவு பெரும்பங்கு வகிக்கும் என இருதலைவர்களும் கூறினர்.
நேபாளப் பிரதமருடன் பேச்சு
இதேபோல் பிரதமர் மோடி, நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஒளியுடன் இன்று தொலைபேசியில் பேசினார்.
கரோனா பரவலால் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலையில், இரு நாட்டு மக்களது ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல், பிராந்தியத்துக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இரு தலைவர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். கரோனா தொற்றுக்கு எதிராக தங்கள் நாடுகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி அவர்கள் விவாதித்தனர்.
நேபாளத்தில் பிரதமர் ஒளியின் தலைமையின் கீழ் இயங்கும் அரசு மேற்கொண்டுள்ள பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு நடவடிக்கைகளையும், கரோனா சவாலுக்கு எதிரான நேபாள மக்களின் தீர்மானமான உறுதிப்பாட்டையும் பிரதமர் மோடி பாராட்டினார்.
கரோனா காரணமாக, எல்லை கடந்து அத்தியாவசியப்பொருட்களை விநியோகிப்பது உள்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண தங்கள் நாடுகளின் நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் இருந்தவாறு, பரஸ்பர ஆலோசனைகளை வழங்குவதுடன் ஒத்துழைப்பு அளிப்பதெனவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT