Published : 10 Apr 2020 06:35 PM
Last Updated : 10 Apr 2020 06:35 PM
லாக் டவுன் காரணமாக வெளியே செல்லமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு உதவும் வகையில், வீடு தேடிச் சென்று மணிப்பூர் காவல்துறை அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக 21 நாள் லாக் டவுனை மத்திய அரசு அறிவித்தது. இதனால் நாட்டின் அத்தனை மாநிலங்களிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடைகள் மூடப்பட்டன. மக்கள் வெளியே வரவேண்டாம், சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் லாக் டவுன் காரணமாகவும் அரசின் உத்தரவைப் பின்பற்றும் வகையிலும் மக்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களுக்காக நேரக் கட்டுப்பாட்டில் வெளியே வரவேண்டிய தேவை உள்ளது. ஆனால், இதைக்கூட தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படும் பல மாநிலங்களில் மக்கள் வாழும் பகுதிக்கே அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு போய் சேர்க்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரின் சில மாவட்டங்களில் காவல்துறையினரே இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் உற்ற நண்பனாக காவல்துறை செயல்படுவதைக் கண்டு மணிப்பூர் மாநில மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் எஸ்.இம்போம்ச்சா சிங் பிடிஐயிடம் கூறியதாவது:
''நாடு முழுவதும் லாக் டவுன் தொடர்ந்ததால் மக்கள் வெளியே செல்வது கடினம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் நிலையை அறிந்த நாங்கள் அவர்களின் வீட்டு வாசலுக்கே சென்று மளிகை சாமான்கள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கத் தொடங்கியுள்ளோம்.
முதற்கட்டமாக மணிப்பூரின் தாவுபால் மற்றும் கச்சிங் மாவட்டங்களில் காவல்துறையினர் வீடு வீடாகச் சென்று அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்தனர்.
லாக் டவுன் நிலையில் மக்கள் சிக்கலை எதிர்கொள்ளாத வகையில் இந்தப் பொருட்களை வழங்குவதற்காக போலீஸார் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தியாவசியப் பொருட்கள் மக்களின் வீட்டு வாசலில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக தாவுபாலில் உள்ள மாவட்டக் காவல்துறை ஒரு குழுவை அமைத்துள்ளது. இதனால் அவர்கள் எந்தத் தேவைக்காவும் வெளியே வந்து அலையாமல் வீட்டுக்குள் வசதியாகத் தங்க முடியும்.
நாங்கள் இலவசப் போக்குவரத்தை வழங்குகிறோம். சில பொருட்கள் இப்பகுதியில் கிடைக்கவில்லை என்றால், எங்கள் பணியாளர்கள் இம்பாலுக்குச் சென்று அவற்றைப் பெற்று வருகிறார்கள்''.
இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் எஸ்.இம்போம்ச்சா சிங் தெரிவித்தார்.
இதுகுறித்து கச்சிங் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி.விக்டோரியா யெங்கோம் கூறுகையில், ''வீடுகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு மட்டுமல்ல, யாராவது உடல்நிலை குன்றியிருந்தால் அவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லவும் தயாராக இருக்கிறோம். இதற்காகவென்றே தனிக் குழுக்களும் கச்சிங் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மனிதாபிமான நடவடிக்கை ஆகும். வெளியே செல்ல முடியாதவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்துகிறோம். இந்த முயற்சியில் பல அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT