Published : 10 Apr 2020 04:46 PM
Last Updated : 10 Apr 2020 04:46 PM
ராஜஸ்தானில் கரோனா வைரஸுக்கு மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பில்வாரா மாவட்டம் தனது கண்டிப்பான கட்டுப்பாடுகளினால் கரோனா வைரஸ் பரவல் சங்கிலியை திறம்பட உடைத்துள்ளது.
முன்னதாக 27 பேர் கரோனா தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் 25 நோயாளிகள் கரோனாவிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்கள். 15 பேர் மருத்துவமனையிலிருந்தே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
பில்வாரா மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பட், “மீதமுள்ள 10 பேரும் கண்காணிப்பில் இருக்கின்றனர், இன்னும் 2 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்” என்றார். பலியான 2 வயதானவர்களுக்கு ஏற்கெனவே பல்வேறு சிக்கல்கள் இருந்தன இதில் ஒரு முதியவர் கோவிட்-19க்காக டெஸ்ட் செய்யப்படும் போதே கோமாவில்தான் இருந்தார் என்றார் ஆட்சியர் ராஜேந்திர பட்.
ஏப்ரல் 3ம் தேதி முதல் ராஜஸ்தானில் 11 நாட்கள் முழு அடைப்பு என்றால் முழு அடைப்புதான். அத்தியாவசியத் தேவைகள் உட்பட குறைக்கப்பட்டன. 4 லட்சம் பேர் கொண்ட நகரிலிருந்து 2 மட்டுமே புதிதாக கரோனா தொற்றுள்ளவர்களாகத் தெரியவந்துள்ளது. 24 லட்சம் மக்களை இந்த மாவட்டத்தில் ஸ்க்ரீன் செய்துள்ளனர், மேலும் தொடர்புத் தடம் காணும் நடவடிக்கையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பயண வரலாறு, கரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுடன் தொடர்பில் இல்லாமலேயே ஆசிரியர் ஒருவருக்கு கரோனா இருப்பது மருத்துவக் குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டுள்ளது.
கடுமையான கட்டுப்படுத்தும் உத்திகள்:
ராஜஸ்தான் பில்வாராவில் கடுமையான வைரஸ் கட்டுப்பாட்டு உத்திகள் பலக்கட்டங்களாகக் கடைபிடிக்கப்பட்டன, மாவட்டம் முதலில் சீல் வைக்கப்பட்டது, யாரும் வெளியே வர முடியாது யாரும் உள்ளே நுழைய முடியாது. பில்வாரா நகரிலும் ஊரகப்பகுதிகளிலும் நோய்க்குறி உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட, உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமை வார்டுகளுக்கு அனுப்பப்பட்டனர். இதோடு மாவட்ட கிராமங்களில் கடும் கண்காணிப்புகளும் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக பில்வாராவில் முழு ஊரடங்கு, அடைப்பு மார்ச் 20ம் தேதி தொடங்கியது. அதாவது முதல் கேஸ் தனியார் மருத்துவமனையில் கண்டுபிடிக்கப்பட்டவுடனேயே முழு லாக்-டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, பிரதமர் மோடியே இதன் பிறகுதான் முழு அடைப்பு உத்தரவிட்டார். லாக்-டவுன் நாட்களில் தீவிரமாக ஸ்க்ரீனிங் டெஸ்ட்கள் நடத்தப்பட்டன.
மாவட்ட நிர்வாகம் அங்குள்ள ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், ஹாஸ்டல்கள், தர்மசாலாக்கள் ஆகியவற்றை 1,500 படுக்கைகள் கொண்ட தனிமைப்பிரிவு வார்டாக, மாற்றினர். எமர்ஜென்சி சூழ்நிலையைச் சமாளிக்க 14,000 சாதாரண படுக்கைகள் கொண்ட வார்டுகளும் உருவாக்கப்பட்டன. இந்த ஒட்டுமொத்த முழு அடைப்பில் அத்தியாவசியப் பொருட்கள் கூட நகரின் வீடுதேடி வந்தன.
மத்திய அமைச்சரவைச் செயலர் ராஜிவ் கவ்பா இந்த பில்வாரா மாடலை புகழ்ந்து தள்ள முதல்வர் அசோக் கெலாட் மற்ற கோவிட்-19 ஹாட்ஸ்பாட்களிலும் இதையே நடைமுறைப்படுத்த அறிவுறுத்தினார். ஜெய்பூர் நகரையும் தனிமைப்படுத்த அறிவுறுத்தினார்.
தற்போது ராஜஸ்தான் பில்வாரா மாவட்ட வைரஸ் கட்டுப்பாட்டு நடைமுறைகளை நாடே திரும்பிப் பார்த்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT