Published : 10 Apr 2020 04:54 PM
Last Updated : 10 Apr 2020 04:54 PM
நாட்டின் 15 மாநிலங்களில் உள்ள 36 மாவட்டங்களில் கடுமையான சுவாசக் கோளாறுடன் கூடிய கரோனா வைரஸ் தொற்று இருக்கும் நோயாளிகளை ஆய்வு செய்த போது அவர்களில் 40 சதவீதம் பேர் எந்த விதமான வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. கரோனா நோயாளிகளுடன் நேரடித் தொடர்பு இல்லாமல் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர் ) எச்சரித்துள்ளது.
இந்த 15 மாநிலங்களில் உள்ள 36 மாவட்டங்களுக்கும் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆய்வு அறிக்கையையும் ஐசிஎம்ஆர் நேற்று வெளியிட்டது. இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் இதழில் இந்த ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 15-ம் தேதி முதல் ஏப்ரல் 2-ம் தேதி வரை ஒட்டுமொத்தமாக 5 ஆயிரத்து 911 நோயாளிகளுக்கு கடுமையான சுவாசக் கோளாறு தொற்று (எஸ்ஏஆர்ஐ) சோதனை நடத்தப்பட்டதில் அதில் 104 பேருக்கு கரோனா பாசிட்டிவ் எனத் தெரியவந்தது.
இதில் பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் எந்த விதமான வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. கரோனா நோயாளிகளுடன் நேரடித் தொடர்பும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் 8 மாவட்டங்களிலும், மேற்கு வங்கத்தில் 6 மாவட்டங்களிலும், தமிழகம் மற்றும் டெல்லியில் தலா 5 மாவட்டங்களிலும் கடுமையான சுவாசக் கோளாறு தொற்று (சாரி) நோயாளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. 15 மாவட்டங்களில் கரோனா பாசிட்டிவ் உடன் இருக்கும் சாரி நோயாளிகள் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடுமையான சுவாசக் கோளாறு தொற்று (சாரி) நோயாளிகள் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதாவது மார்ச் 14-ம் தேதிக்கு முன்பாக இவர்கள் பாதிப்பின் சதவீதம் பூஜ்ஜியமாக இருந்த நிலையில், ஏப்ரல் 2-ம் தேதிக்குள்ளாக 2.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் குறிப்பிட்ட இந்த மாவட்டங்களில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துக் கண்காணிக்க வேண்டும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT