Published : 10 Apr 2020 01:46 PM
Last Updated : 10 Apr 2020 01:46 PM
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு நாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள லாக் டவுன் வரும் 14-ம் தேதி முடிவதையடுத்து, அதை மேலும் நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் லாக் டவுன் நீட்டிப்பு குறித்து அதிகாரபூர்வமாக இறுதி முடிவு எடுக்கப்படும். ஆனால், பல்வேறு கட்சித் தலைவர்களையும் பிரதமர் மோடி தனித்தனியாக தொலைபேசியில் அழைத்துப் பேசி கருத்துகளைக் கேட்டார். அப்போது பெரும்பாலான தலைவர்கள் லாக் டவுனை ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பின் நீட்டிக்குமாறு கருத்து தெரிவித்தனர்.
கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லாக் டவுன் அறிவித்த நிலையிலும் கூட 199 பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கரோனா வைரஸ் கட்டுக்குள் வராத சூழலில் வரும் 14-ம் தேதிக்குப் பின் லாக் டவுன் நீடிக்குமா என்ற பெரிய கேள்வி எழுந்தது. இது தொடர்பாக ஏற்கெனவே மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவத் துறையினர், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சியின் குழுத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இதில் பெரும்பாலானோர் நாட்டில் கரோனா வைரஸ் பரவல் சூழலில் லாக் டவுனை நீக்கினால் நோய்த்தொற்று மேலும் அதிகரிக்கும். ஆதலால், தொடர்ந்து லாக் டவுனை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களையும், அவர்களின் உயிரையும் காப்பாற்றுவது அவசியம் என வலியுறுத்தினர்.
மத்திய அரசின் அதிகாரபூர்வ அறிக்கையில்கூட, “மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், தொற்றுநோய் தடுப்பு வல்லுநர்கள்,மருத்துவ வல்லுநர்கள் ஆகியோர் லாக் டவுனை நீட்டிக்க ஆதரவு கோரியுள்ளார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் மோடியுடன் கடந்த புதன்கிழமை பேசிய பின் பிஜூ ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் பினாகி மிஸ்ரா நிருபர்களிடம் கூறுகையில், “ பிரதமர் மோடி ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியுள்ளார். லாக் டவுனுக்கு முந்தைய காலகட்டமும், லாக் டவுனுக்குப் பிந்தைய காலமும் நிச்சயம் ஒரேமாதிரியாக இருக்காது” எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் முடிவெடுக்கும் முன்பாக ஒடிசா மாநிலம் தங்கள் மாநிலத்தில் லாக் டவுன் காலத்தை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து, ஜூன் 13-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் என்று அறிவித்தது.
இந்த சூழலில் 2-வது முறையாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக்குப் பின், பிரதமர் மோடி லாக் டவுன் நீட்டிப்பு குறித்து மக்களுக்கு முறைப்படி அறிவிப்பார் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT