Last Updated : 15 Aug, 2015 12:31 PM

 

Published : 15 Aug 2015 12:31 PM
Last Updated : 15 Aug 2015 12:31 PM

25 ஆண்டுகளில் 80 பத்திரிகையாளர்கள் கொலை: ஒன்றைத் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் நிலுவை

கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 80 என உள்ளது. இதில், ஒன்றை தவிர மற்ற அனைத்து வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளது.

இதை தாக்கல் செய்த கவுன்சில், வியன்னாவை சேர்ந்த பன்னாட்டு பத்திரிகையாளர்கள் ஆய்வு நிறுவனம் ஒன்று ‘மரணப் பட்டியல்’ என்ற பெயரில் வெளியிட்ட அறிக்கையை கோடிட்டுக் காட்டியுள்ளது.

அதில், உலகில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படும் நாடுகளில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் இருப்பதாகவும், கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 80 பத்திரிகையாளர்கள் இந்தியாவில் கொல்லப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றில் ஒன்றை தவிர மற்ற அனைத்து வழக்குகளும் நீதிமன்ற விசாரணை அல்லது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டாத நிலையில் உள்ளதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013-ல் மும்பையின் சக்தி மில்லில் பெண் பத்திரிகையாளர் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டார். இந்த ஒரு வழக்கில் மட்டும் விரைவு நீதிமன்றத்தால் விசாரணை ஒரு வருடத்தில் முடிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டணை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் அமைக்கப்பட்ட உண்மை அறியும் உயரிய குழு 11 மாநிலங்கள் பயணம் செய்து அளித்த அறிக்கையும் உச்ச நீதிமன்றத்தின் பதில் மனுவில் இணைக்கப்பட்டுள்ளது. இதில், அம் மாநில அரசுகள்

மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த கவனமும் செலுத்துவதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை வெறும் 6.7 சதவிகித வழக்குகளில் மட்டுமே பத்திரிகையாளர்களை தாக்கியவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உபியில் கடந்த ஜூன் 8-ல் எரித்து கொல்லப்பட்ட பத்திரிகையாளரான ஜகேந்திரா சிங் வழக்கை சிபிஐ விசாரிக்க கேட்டும் நாடு முழுவதுமான பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கோரியும் சத்திஷ் ஜெயின் என்ற பத்திரிகையாளர் கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்ற அமர்வு, மத்திய அரசு, உபி அரசு மற்றும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவிடம் பதில் கேட்டு நோட்டீஸ் அளித்திருந்தது.

இதற்கு உச்ச நீதிமன்றத்தின் முன் நேற்று அளித்த தன் பதிலில் பிரஸ் கவுன்சில், ஊழல் போன்ற அநியாங்களை சமூகத்தின் முன் முதலில் வெளிக்கொண்டு வருபவர்களுக்கு உள்ள சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு சட்டப்படி பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி கோரியுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x