Published : 08 Apr 2020 04:02 PM
Last Updated : 08 Apr 2020 04:02 PM
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டுள்ள 21 நட்கள் லாக்-டவுனால் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்களுக்கு ரூ.1.70 லட்சம் கோடி பொருளாதார நிதித்தொகுப்பை மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.
அடுத்ததாக தேவை மற்றும் சப்ளை பகுதியில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் மிகப்பெரிய பொருளாதாரத் தொகுப்பை 2-வது கட்டமாக மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. இதற்கான தீவிரமான ஆலோசனையில் மத்திய நிதியமைச்சகம் இறங்கியுள்ளது. இந்தத் திட்டங்களுக்கான வரையறைகள், அறிவிக்கும் காலம் ஆகியவை முடிவு செய்யப்பட்டால் அறிவிக்கப்பட்டுவிடும்.
கரோனா வைரஸைத் தடுக்கும் நடவடிக்கையில் முக்கியமாக 21 நாட்கள் லாக்-டவுன் திட்டத்தை கொண்டு வந்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறுந்தொழில்கள் மூடப்பட்டுள்ளன. சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் மக்கள் வீட்டுக்குள்ளே இருக்கிறார்கள்.
இதில் வருமானமின்றி பாதிக்கப்பட்ட ஏழை, கூலித்தொழிலாளர்கள் ஆகியோருக்கு உணவுப் பாதுகாப்பு, பணம் ஆகியவற்றை வழங்கும் வகையில் ரூ.1.70 லட்சம் கோடி பொருளாதார நிதித்தொகுப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் கடந்த வாரம் அறிவித்தார்.
இந்நிலையில், 2-வது கட்டமாக மிகப்பெரிய பொருளாதார நிதித்தொகுப்பை அறிவிக்க மத்திய அரசு தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2-வது கட்ட பொருளதார நிதித்தொகுப்பில் சிறு, நடுத்தர நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், போக்குவரத்து, சுற்றுலாத்துறை, விமானத்துறை ஆகியவற்றுக்குச் சலுகை அளிக்கும் வகையில் அறிவிப்புகள இருக்கும் எனத் தெரிகிறது.
வரி செலுத்தும் மக்களுக்கு வரிச்சலுகைகள், சில முக்கியப் பொருட்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து வரி்விலக்கு போன்ற சலுகைகளும், முதலீட்டுச் சந்தையை வலுப்படுத்தும் அறிவிப்பும் இருக்கும்.
மேலும், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் குறிப்பிட்ட 5 பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை உற்பத்தியில் ஈடுபடுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் நேரடியாகவே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தொழிற்சாலைகளையும் அடையும் வகையில் திட்டங்கள் இருக்கலாம்.
இதுகுறித்து நிதியமைச்சக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “நிதியமைச்சகம் தொடர்ந்து பல்வேறு அமைச்சகங்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு அவர்களிடம் இருந்து தரவுகளைப் பெற்று, எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், பொருளாதார ஊக்குவிப்பு அறிவிப்புகள் குறித்து ஆலோசித்து வருகிறது. லாக்-டவுன் சூழல் குறித்து தெளிவான முடிவு கிடைத்தவுடன் இறுதிக்கட்ட அறிவிப்பு வெளியாகும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த நிதித்தொகுப்பை அறிவித்தபோது நிதியமைச்சர் நிர்மலா சீதாாராமன் பேசுகையில், “தற்போதுள்ள லாக்-டவுனால் கார்ப்பரேட், சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஆகியோரின் கவலைகளை அரசு புரிந்துகொள்ளும். விரைவில் அதற்குரிய திட்டங்களுடன் சந்திப்பேன். முதலில் ஏழை மக்களுக்கு உணவு, அவர்களின் செலவுக்குப் பணம் ஆகியவற்றை அவர்களின் கைகளில் சேர்க்க வேண்டும். அதன்பின் மற்றவற்றைச் சிந்திக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT