Published : 07 Apr 2020 01:00 PM
Last Updated : 07 Apr 2020 01:00 PM
கரோனா வைரஸுக்கு எதிரான போரில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் உதவலாம். ஆனால், உயிர்காக்கும் மருந்துகள் இந்தியர்களுக்குதான் முதலில் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டலைத் தொடர்ந்து உலக நாடுகளுக்கு மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இன்று அனுமதியளித்தது. இதைச் சுட்டிக்காட்டி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தாக மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைக்குப் பின், இந்த மாத்திரைகளின் ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த மாதம் 25-ம் தேதி தடை செய்ததது.
ஆனால் கரோனா வைரஸால் 3 லட்சம் மக்களுக்கு மேல் பாதிப்பையும், 10 ஆயிரத்துக்கு மேல் உயிரிழப்பையும் சந்தித்த அமெரிக்கா அதிக அளவில் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை இந்தியாவிடம் ஆர்டர் செய்திருந்தது. மத்திய அரசின் தடையால் அந்த மாத்திரைகள் அமெரிக்காவுக்குக் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. இதனால் பிரதமர் மோடியிடம் தடையை விலக்கும்படி ட்ரம்ப் கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு விலக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப், “ இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரை ஏற்றுமதி தடையை விலக்காதது வியப்பளிக்கிறது. எதிர்காலத்தில் பதிலடி கொடுப்போம்” எனத் தெரிவித்திருந்தார். இதனால், மனிதநேய அடிப்படையில் தேவைப்படும் நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்யப்போவதாக இன்று மத்திய அரசு தெரிவித்தது.
இந்த சூழலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், “பதிலடி கொடுப்பதும், பழிக்குப் பழிவாங்குவதும் நட்புறவு அல்ல. கரோனா வைரஸுக்கு எதிரான போரில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் இந்த நேரத்தில் உதவ வேண்டும். ஆனால், உயிர்காக்கும் மருந்துகள் இந்தியர்களுக்குப் போதுமான அளவு முதலில் கிடைக்க வேண்டும், முன்னுரிமை அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT