Published : 06 Apr 2020 06:04 PM
Last Updated : 06 Apr 2020 06:04 PM
கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல், அதனைத் தடுக்க அரசு விதித்துள்ள லாக்-டவுன் போன்றவற்றால் மக்கள் வீ்ட்டைவிட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான பணத்தை வீட்டிலேேய வழங்குவதற்கு அஞ்சல் துறையின் மூலம் கேரள அரசு திட்டம் வகுத்துள்ளது.
இதன்படி அந்தந்தப் பகுதிக்கு உரிய தபால்காரரிடம் பணம் தேவைப்படுபவர்கள் தாங்கள் வங்கியில் கணக்கு வைத்துள்ள வங்கியின் பெயர், பெயர், முகவரி, தேவைப்படும் பணம் ஆகியவற்றை தொலைபேசி அல்லது செல்போன் மூலம் தெரிவித்தால் வீட்டுக்கே வந்து அந்த தபால்காரர் பணத்தைத் தந்துவிடுவார்.
அஞ்சல் துறையுடன் சேர்ந்து கேரள அரச இந்தத் திட்டத்தை இன்று அறிமுகம் செய்துள்ளது. மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து நிதியமைச்சர் தாமஸ் ஐசக் நிருபர்களிடம் கூறுகையில், “ஏப்ரல் 8-ம் தேதி முதல் கேரளாவில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் இருக்கும் தபால் அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் தங்களின் முகவரி, பெயர், செல்போன் எண், கணக்கு வைத்துள்ள வங்கியின் பெயர், கணக்கு எண், தேவைப்படும் பணம் ஆகியவற்றை தெரிவித்தால் தபால்காரர் வீட்டுக்கே வந்து பணத்தைத் தந்துவிடுவார்.
ஆதார் எண் அடிப்படையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம். 93 வங்கிகள் ஆதார் எண்ணுடன் இணைந்த பேமெண்ட் திட்டத்தைச் செயல்படுத்துவதால் இது எளிதாகிறது. மக்களும் ஊரடங்கு நேரத்தில் ஏடிஎம்களுக்குச் செல்ல வேண்டாம். மக்களும் சமூல விலகலைக் கடைப்பிடிக்கலாம்.
நேரடிப் பணப் பரிமாற்ற முறையில் புதிய புரட்சி செய்யும் விதத்தில் முதியோர், ஓய்வூதியதாரர்களும் வங்கிகளுக்கோ அல்லது ஏடிஎம்களுக்கோ செல்லத் தேவையில்லை. இந்த முறையின் மூலம் பணத்தை வீட்டிலேயே பெற்றுக்கொள்ளலாம்.
கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து ஆதார் அடிப்படையிலான பேமெண்ட் திட்டத்தை போஸ்டல் வங்கியும் செயல்படுத்தத் தொடங்கிவிட்டது.
தபால்காரர் வைத்திருக்கும் இயந்திரத்தில் ஆதார் எண்ணைப் பதிவு செய்து, ரேகை வைத்தவுடன் , தேவைப்படும் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கலாம். இதன் மூலம் ஒருவர் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை பெறலாம்.
மக்களிடம் கொண்டு செல்லப்படும் கையடக்க இயந்திரம் ஒவ்வொரு முறையும் சானிடைசர் மூலம் சுத்தம் செய்யப்பட்டபின்புதான் விரல் ரேகை வைக்கப் பயன்படுத்தப்படும். மக்களும் சானடைசர் மூலம் கைகளைக் கழுவ வேண்டும். இந்தத் திட்டத்துக்காக போதுமான அளவு சானிடைசர்களை தபால் துறையும் வாங்கி இருப்பு வைத்துள்ளது’’ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT