Published : 06 Apr 2020 05:16 PM
Last Updated : 06 Apr 2020 05:16 PM
கரோனா வைரஸுக்கு எதிராக நாடு போராடி வரும் நிலையில், பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் அளிப்பதற்காக மலிவு விலையில் செயற்கை சுவாசக் கருவியை ரயில்வேயின் கபூர்தலா ரயில் தொழிற்சாலை தயாரித்துள்ளது.
இந்த மலிவு விலை செயற்கை சுவாசக் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அனுமதி அளித்தால், ரயில்வே உற்பத்தியைத் தொடங்கிவிடும். நாள் ஒன்றுக்கு 100 கருவிகளைத் தயாரிக்க முடியும்.
கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் அதில் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சையளிக்க மே 15-ம் தேதிக்குள் நமக்கு ஒரு லட்சம் முதல் 2.20 லட்சம் வரை செயற்கை சுவாசக் கருவிகள் தேவை. ஆனால், கைவசம் அரசிடம் இருப்பதோ 57 ஆயிரம் செயற்கை சுவாசக் கருவிகள் மட்டுமே. இவற்றின் விலையும் ரூ. 5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஆகும் என ப்ரூக்கிங் ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்த சூழலில் செயற்கை சுவாசக் கருவிகளைத் தயாரிக்கும் பணியில் கபூர்தலாவில் உள்ள ரயில் தொழிற்சாலை இறங்கி, அதில் வெற்றியும் பெற்றுள்ளது. இந்த செயற்கை சுவாசக் கருவியின் விலை ரூ.10 ஆயிரம் வரை கம்ப்ரஸர் இல்லாமல் கிடைக்கும்.
இதுகுறித்து கபூர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலையின் பொது மேலாளர் ரவிந்திர குப்தா நிருபர்களிடம் கூறுகையில், “கரோனா நோயாளிகள் உயிர் காக்கும் கருவியாக இருக்கும் செயற்கை சுவாசக் கருவிகளை நாங்கள் தயாரித்துள்ளோம். இந்தக் கருவிகள் வெளியில் 5 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை விற்கப்படும். ஆனால், ரயில்வே துறை மக்களுக்காக மிகக்குறைந்த விலையில் இந்த செயற்கை சுவாசக்கருவியைத் தயாரித்துள்ளது.
ஐசிஎம்ஆர் அனுமதி கிடைத்துவிட்டால், நாள் ஒன்றுக்கு 100 கருவிகளை எங்களால் தயாரிக்க முடியும். இந்த வென்டிலேட்டர் மூலம் நோயாளிகளின் நுரையீரலுக்கு நேரடியாக ஆக்ஸிஜனைச் செலுத்தி ஆபத்தான நோயாளிகளைக் காப்பாற்ற முடியும். இதற்கு ஜீவன் எனப் பெயரிட்டுள்ளோம்.
ரயில்வே துறையின் 11 பேர் கொண்ட ஆராய்ச்சிக் குழு இந்த செயற்கை சுவாசக் கருவியைத் தயாரித்துள்ளது. இந்தக் கருவியைத் தயாரிக்கத் தேவையான அனைத்துப் பொருட்களும் ரயில்வே துறையின் தயாரிப்புகளாகும். இந்தக் கருவிக்குத் தேவையான மைக்ரோ ப்ராஸசர் மட்டும் டெல்லி, நொய்டா நகரங்களில் இருந்து வரவழைத்தோம்.
இந்தக் கருவியில் நோயாளியின் சுவாச அளவு, எஸ்பியரி ரேஷியோ, டைடல் வால்யூம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. முழுமையாக பரிசோதனை முடித்துவிட்டோம். சிறப்பாக இயங்குகிறது. இதை நாம் புழக்கத்துக்கு கொண்டுவந்தால், வெளியில் வாங்கு ம் செயற்கை சாவாசக் கருவியின் விலையில் மூன்றில் ஒருபகுதிதான். கூடுதலாக சில வசதிகள் சேர்த்தால் ரூ.30 ஆயிரத்துக்குள் அடங்கிவிடும்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT