Published : 05 Apr 2020 03:40 PM
Last Updated : 05 Apr 2020 03:40 PM
கரோனா வைரஸ் போரில் நாம் வெல்வோம் என்ற தன்னம்பிக்கையின் அடையாளமாகவும் ஒருமைப்பாட்டின் குறியீடாகவும் ஞாயிறு இரவு மின்விளக்குகளை அணைத்து விளக்கொளியை ஏற்றுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
பொதுவாக பிரதமர் இது போல் முறையீடு, வேண்டுகோள் விடுக்கும் போதெல்லாம் அதற்கு விளக்கமளிக்க சிலரும் மீம்ஸ்களை வெளியிட்டு கிண்டல் செய்பவர்கள் சிலரும் என குழுக்கள் பல்வேறு விதமாக கருத்துகளில் பிளவுண்டு கிடக்கும்.
ஆனால் கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெ.டி.குமாரசாமியோ, இது ‘பாஜகவின் மறைமுக திட்டம்’ என்று புதிய காரணம் ஒன்றைக் கூறி சாடியுள்ளார்.
“பாஜக தொடங்கிய நாளை குறிக்கும் விதமாக மறைமுகமாக நாட்டு மக்களை மெழுகுவர்த்தி, தீபம் ஏற்றி அந்த தினத்தை மக்கள் அனுசரிக்கப் பணிக்கிறாரா நம் பிரதமர்? ஏப்ரல் 6ம் தேதி பாஜக தொடங்கப்பட்ட நாள், எனவே பிரதமரின் இந்த தீபமேற்று வேண்டுகோளுக்கு பின்னால் இந்தக் காரணத்தை தவிர வேறு காரணம் என்ன இருக்க முடியும்? இதற்கு பிரதமர் விஞ்ஞானப்பூர்வ அறிவார்த்த விளக்கம் அளிக்க முடியுமா என்று நான் சவால் விடுக்கிறேன்.
ஒரு தேசிய நெருக்கடியை தன்னுடைய ஆளுமையின் விஷயமாக மாற்றுவது வெட்கக்கேடு. அதைவிடவும் மோசம் தன் கட்சியின் திட்டத்தை உலக பேரிடர் காலத்தில் முன்னெடுப்பது. பிரதமருக்கு கொஞ்சமாவது உணர்வு வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கோவிட்-19 காய்ச்சல் பரவலுக்கு அரசு என்ன ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது போன்றவற்றைப் பற்றி பேசாமல் அர்த்தமற்ற செயல்களைச் செய்யச் சொல்வதன் மூலம் மக்கள் வெறுப்படைந்ததுதான் மிச்சம் என்றார் ஹெ.டி.தேவேகவுடா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT