Published : 05 Apr 2020 01:20 PM
Last Updated : 05 Apr 2020 01:20 PM
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், ஒழிக்கவும் லாக் டவுன் நேரத்தில் மக்களுக்கு தீவிரமாக கரோனா பரிசோதனை நடத்துவது முக்கியம், அப்போதுதான் லாக்டவுனை சரியாகப் பயன்படுத்த முடியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதே கருத்தை நேற்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் வலியுறுத்திய நிலையில் இப்போது ப.சிதம்பரமும் வலியுறுத்தியுள்ளார். லாக்டவுன் மூலம் கரோனா பரவுவதைத் தடுக்கத்தான் முடியும் ஆனால், கராோனா யாருக்கெல்லாம் இருக்கிறது என்பதை கண்டறிய முடியாது.
உலகில் 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இருப்பினும் 77 உயிர்கள் பலியாகியுள்ளன 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் குறைக்கவும், தடுக்கவும் 21 நாட்கள் லாக்-டவுனை மத்திய அரசு அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது
இந்நிலையில் லாக்-டவுனின் பலன் முழுமையாகக் கிடைக்க மக்கள் அனைவருக்கும் கரோனா குறித்த பரிசோதனை அவசியம் என்று காங்கிரஸ் மூத்ததலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
ட்விட்டரில் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில் “ காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, மத்திய அரசு குறைவான மக்களுக்கு கரோனா சோதனை நடத்துவது என்பது சரியான முடிவுகளை கொடுக்க குறைபாடு உடைய உத்தி. தொற்றுநோய் நிபுணர்கள் வலியுறுத்துவதுபோல், மக்களுக்கு மிகப்பெரிய அளவில், தீவிரமான கரோனா பரிசோதனை நடத்தப்படுவது அவசியம். அந்த தீவிரமானப் பரிசோதனையை இப்போது இன்றிலிருந்து தொடங்குவது அவசியம் .
பரிசோதனை, பரிசோதனை,கண்டுபிடியுங்கள், தனிமைப்படுத்துங்கள், சிகிச்சையளியுங்கள் இதுதான் லாக்டவுனை சரியாக பயன்படுத்தும் வழி. இதுதான் ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் நாடுகளிடம் இருந்து நாம் கற்கும் பாடம்.
இந்திய மருத்து ஆராய்ச்சிக் கவுன்சில் கரோனா வைரஸ் அதிகமாகப் பரவும் இடங்களில் மக்கள் அனைவருக்கும் அதிவேகமான ரத்தப்பரிசோதனை நடத்தத் தயாராக இருப்பதாக அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளதை நான் வரவேற்கிறேன். பெரும்பாலான மருத்துவர்கள் கருத்துப்படி அனைவருக்கும் மருத்துவப்பரிசோதனை நடத்த வேண்டும் என்று இப்போது கூறுவது காலம் கடந்த அறிவுரை என்று தெரிவிக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்
லாக்-டவுனின் பலன் முழுமையாகக் கிடைக்க மக்கள் அனைவருக்கும் கரோனா குறித்த பரிசோதனை அவசியம் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். " மக்களில் எத்தனை பேருக்கு கரோனா வைரஸ் என்பதை அறிந்துகொள்ள மிகப்பெரிய அளவில் பரிசோதனையை நாம் உடனடியாக நடத்துவது அவசியம்.
இந்த பரிசோதனையின் மூலம் நாம் மிகவும் மிதிப்பு மிக்க தகவல்களான கரோனா வைரஸின் தீவிரத்தன்மை, கரோனா வைரஸின் திரள், எதைநோக்கிச் ெசல்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.இந்த லாக்டவுன் மூலம் நாம் பலன்களைப் பெறுவதற்கு, மிகப்பெரிய அளவில் மக்களுக்கு கரோனா வைரஸ் குறித்த பரிசோதனை நடத்த வேண்டும்" எனப் பிரியங்கா காந்தி தெரிவி்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT