Published : 05 Apr 2020 12:55 PM
Last Updated : 05 Apr 2020 12:55 PM
கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள பொதுத் துறை நிறுவனங்களும், தளவாட உற்பத்திக் கழகமும் ( Ordnance Factory Board - OFB) தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
நாட்டில் ஆறு மாநிலங்களில் தன்னிடம் உள்ள 10 மருத்துவமனைகளில் 280 தனிமைப்படுத்தல் சிகிச்சை படுக்கை வசதிகளை உருவாக்க தளவாட உற்பத்திக் கழகம் திட்டமிட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாடிகல்ஸ் லிமிடெட் (எச்.ஏ.எல்.) நிறுவனம் தனிமைப்படுத்தல் சிகிச்சைக்காக, தீவிர சிகிச்சைப் பிரிவில் 3 படுக்கைகளை ஏற்பாடு செய்துள்ளது. வார்டுகளில் 30 படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. மேலும், 30 அறைகளைக் கொண்ட ஒரு கட்டடமும் தயார் செய்யப்படுகிறது. மொத்தத்தில், எச்.ஏ.எல். வளாகத்தில் 93 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
உலக சுகாதார நிறுவனம் விதித்துள்ள தரநிலைகளின்படி கை கிருமிநாசினியை உருவாக்கித் தயாரிக்கும் செயல்பாடு தளவாட உற்பத்திக் கழகத் தொழிற்சாலைகளில் நடந்து வருகிறது. எச்.எல்.எல். நிறுவனத்திடம் இருந்து 13,000 லிட்டர் அளவுக்கு ஆர்டர் வந்திருக்கிறது. மையமாக்கப்பட்ட கொள்முதலுக்கான முன்னோடி அமைப்பாக எச்.எல்.எல். நிறுவனம் உள்ளது.
சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அமைந்திருக்கும் தளவாட சாதனங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள், உடலை மூடும் கவசங்கள், முகக்கவச உறை தயாரிப்பு ஆகிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு 30,000 வென்டிலேட்டர்களை அடுத்த 2 மாதங்களில் தயாரித்து வழங்கும் தீவிர முயற்சியில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஈடுபட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT