Published : 04 Apr 2020 03:32 PM
Last Updated : 04 Apr 2020 03:32 PM

சொந்த ஊரில் 1500 பேருக்கு விருந்து; துபாயில் இருந்து வந்தவரால் ம.பி.யில் பரவிய கரோனா

பிரதிநிதித்துவப் படம்

போபால்

மத்திய பிரதேசத்தில் துபாயில் இருந்த வந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் அவர் நடத்திய விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 1500 பேரும் தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர். கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு ஸ்தலங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்தநிலையில், மத்திய பிரதேசத்தில் துபாயில் இருந்த வந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் அவர் நடத்திய விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 1500 பேரும் தற்போது கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் மொரோனாவைச் சேர்ந்தவர் சுரேஷ். துபாயில் வேலை செய்து வந்த அவர் கடந்த 17-ம் தேதி சொந்த ஊர் திரும்பியுள்ளார். துபாயில் அவர் கிளம்பும் முன்பாக அவருக்கு கரோனா தொற்று சோதனை நடந்துள்ளது. ஆனால் அதில் அவருக்கு தொற்று ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது தாய் ஏற்கெனவே இறந்து விட்ட நினைவில் மார்ச் 20-ம் தேதி தனது தாய் நினைவாக தங்கள் ஊரில் விருந்து ஒன்றுக்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார். அந்த விருந்தில் 1500 பேர் பங்கேற்று உணவருந்தியுள்ளனர்.

இதையடுத்து மார்ச் 25-ம் தேதி அவருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்ட நிலையில் அடுத்த சில நாட்களில் அவர் மருத்துவமனை சென்றுள்ளார். அவருக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் 11 பேருக்கு சோதனை நடந்தது. அடுத்தடுத்து நாட்களில் அவர்களுக்கும் தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த பகுதியே தற்போது அச்சத்தின் பிடியில் உறைந்துள்ளது. விருந்தில் கலந்து கொண்ட 1500 பேருக்கும் சோதனைகள் நடைபெற்று வருகிறது. அந்த இடத்தை முழுமையாக போலீஸார் தடுத்து வைத்துள்ளனர்.

பிற இடங்களில் இருந்து அங்கு மக்கள் வரவும், அந்த பகுதி மக்கள் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய பிரதேசத்தின் கரோனா ‘ஹாட்ஸ்பாட்’ ஆக இந்த பகுதி மாறியுள்ளது.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x