Last Updated : 04 Apr, 2020 03:33 PM

1  

Published : 04 Apr 2020 03:33 PM
Last Updated : 04 Apr 2020 03:33 PM

லாக்டவுன் காலத்திலும் கேன்சர் நோயாளிகளுக்கு ரத்த தானம் : அவசர உதவி புரிந்த 100 ராணுவ வீரர்கள்

பெங்களூருவில் உள்ள அரசு கேன்சர் மருத்துவமனையில் இந்திய ராணுவ வீரர்கள் சமூக இடைவெளியுடன் காத்திருந்து ரத்த தானம் வழங்கினர். ’ படம்: சிறப்பு ஏற்பாடு.

லாக்டவுன் காரணத்தால் பெங்களூரு மருத்துவமனையில் திடீரென ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள கேன்சர் நோயாளிகளுக்காக 100 ராணுவ வீரர்கள் ரத்த தானம் செய்து உதவி புரிந்துள்ளனர்.

இந்தியாவில் ஊடுருவியுள்ள கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துதற்காக 21 நாள் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.

இந்நிலையில் பெங்களூருவில் அரசு நடத்தும் 'கிட்வாய் மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆப் ஆன்காலஜி' கேன்சர் மருத்துவமனை நோயாளிகளுக்கு மிக மிக அவசர நிலையில் ரத்தம் தேவைப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகமோ லாக்டவுன் காலமாக இருப்பதால் ரத்த தானம் செய்ய முன்வருவோரை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான விரைவான பணியல்ல'' என்று ஆலோசித்து இறுதியாக ராணுவத்தினரை நாடுவதென ஒரு முடிவெடுத்தது.

இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பெங்களூருவில் உள்ள அரசு கேன்சர் மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட ரத்தப் பற்றாக்குறையினால் நோயாளிகள் அவதியுற்றதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

ஆனால் அவர்களுக்கு உடனடியாக வழங்க இயலாளத அளவுக்கு ரத்த வங்கியில் திடீரென ரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கோவிட் 19 க்கு எதிராக நாடு தழுவிய லாக்டவுன் காரணமாக ரத்த தானம் செய்பவர்களும் யாரும் இல்லை.

பெங்களூருவில் உள்ள மருத்துவ அதிகாரிகளின் வேண்டுகோள் பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்தனர். பெங்களூருவில் உள்ள கிட்வாய் மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆப் ஆன்காலஜி' அரசு கேன்சர் மருத்துவமனை வளாகத்தில் உடனடியாக ஒரு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முறையான சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.

முகாமில் கலந்துகொண்டு, அரசு நடத்தும் கிட்வாய் மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆப் ஆன்காலஜியில் சிகிச்சை பெற்றுவரும் புற்றுநோயாளிகளுக்கு உதவுவதற்காக இந்திய ராணுவத்தின் 100 க்கும் மேற்பட்ட படை வீரர்களும் ரத்த தானம் செய்தனர்.

இவ்வாறு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x