Published : 03 Apr 2020 02:03 PM
Last Updated : 03 Apr 2020 02:03 PM
நாங்கள் வரும் 5-ம் தேதி தீபம் ஏற்றுகிறோம். ஆனால், நீங்கள் நாட்டில் உள்ள பொருளாதாரக் குழப்பங்களுக்கும், வேதனைகளுக்கும் தீர்வு காணுங்கள் என்று பிரதமர் மோடியின் உரைக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.
ஏழை மக்களுக்கும், கூலித் தொழிலாளர்களுக்கும் 2-வது கட்ட பொருளாதார நிதித்தொகுப்பை பிரதமர் மோடி அறிவிப்பார் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தேன் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த நாட்களில் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். அவர்களுக்குப் பொருளாதார நிதித்தொகுப்பை அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அரசை வலியுறுத்தி இருந்தார்.
இதையடுத்து, கடந்த வாரம் ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார நிதித்தொகுப்பை ஏழை மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் அறிவித்தார். ஆனால், இது போதுமானதாக இல்லை என்று கூறிய ப.சிதம்பரம், 2-வது கட்ட பொருளாதார நிதித்தொகுப்பை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசைக் கோரியிருந்தார்.
இந்த சூழலில் பிரதமர் மோடி இன்று காலை மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார். அதில் மக்களுக்க நிதித்தொகுப்பு ஏதும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் விளக்கை அனைத்து, தீபம் ஏற்ற வேண்டும் என பிரதமர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் பிரதமர் மோடியை கடுமையாகச் சாடியுள்ளார்.
அவர் பதிவிட்ட கருத்து:
“அன்புள்ள பிரமதர் மோடி. உங்கள் பேச்சைக் கேட்கிறோம். வரும் 5-ம் தேதி வீட்டில் தீபம் ஏற்றுகிறோம். அதற்குப் பதிலாக நீங்கள் எங்கள் பேச்சையும், பொருளாதார வல்லுநர்கள், தொற்றுநோய் வல்லுநர்களின் நல்ல அறிவுரையையும் கவனமாகக் கேளுங்கள்.
கடந்த 25-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த நிதித்தொகுப்பில் ஏழைகளையும், தொழிலாளர்களையும் முற்றிலும் புறந்தள்ளிவிட்டு நிதித்தொகுப்பை அறிவித்தார். ஆதலால், இன்றைய உங்கள் உரையில் ஏழைகள் வாழ்வாதாரத்துக்குத் தாராளமாக ஆதரவு அளிக்கும் 2-வது நிதித்தொகுப்பை அறிவிப்பீர்கள் என்று எதிர்பார்த்தோம்.
வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும், வர்த்தகம் செய்வோர் முதல் கூலித்தொழிலாளி வரை, பொருளாாரச் சரிவைத் தடுத்து நிறுத்தும் வகையில் அறிவிப்புகளை அறிவிப்பீர்கள். பொருளாதார வளர்ச்சி இயந்திரத்தை மீண்டும் இயக்கிவிடுவீர்கள் என எதிர்பார்த்தார்கள்.
ஆனால், மக்கள் இரு உரையிலும் ஏமாறறம் அடைந்துள்ளனர். நீங்கள் சொல்லும் விளக்கேற்றும் குறியீடு முறை என்பது முக்கியம்தான். ஆனால், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் தீவிரமான சிந்தனைகளும், நடவடிக்கைகளும் சமமான முக்கியம்''.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.
எதிர்காலம் பற்றி பார்வை இல்லை
காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சசி தரூர் ட்விட்டரில் பிரதமர் மோடி உரை பற்றி கூறுகையில், “பிரமதர் மோடியின் உரையில் எதிர்காலம் குறித்த எந்தத் தொலைநோக்கும் இல்லை. கவனித்தோம் பிரதமர் ஷோமேன். மக்களின் வேதனைகளை, சுமைகளை, பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்கும் எந்த அறிவிப்பும் உங்கள் பேச்சில் இல்லை. லாக்-டவுனுக்குப் பின் வரும் பிரச்சினைகளை எவ்வாறு அடையாளம் காணப்போகிறோம் என்பதில் எந்த தொலைநோக்கும் இல்லை'' எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT