Published : 03 Apr 2020 10:21 AM
Last Updated : 03 Apr 2020 10:21 AM
கரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாம் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்த வரும் ஞாயிற்றுக்கிழமை(5-ம் தேதி) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கை அணைத்து தீபம், டார்ச், செல்போன் லைட்டை வீட்டுக்குள் ஒளிர விட வேண்டும் எனப் பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் 21நாட்கள் ஊரடங்கு நாடுமுழுவதும் கடந்த 25-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இன்று ஊரடங்கு உத்தரவில் 9-வது நாளை மக்கள் எட்டியுள்ளார்கள். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மக்களில் பெரும்பான்மையினர் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு வீட்டில் இருக்கின்றனர்
இந்த சூழலில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது:
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நாம் 9-வது நாளை எட்டியுள்ளோம். இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில் மக்கள் அனைவரும் எப்போதும் பார்த்திராத அளவு ஒழுக்கத்தையும், சேவையையும் வெளிப்படுத்தி வருகிறீர்கள்.
மத்திய அரசு நிர்வாம், மாநில நிர்வாகங்கள், அனைவரும் சேர்ந்து கரோனா வைரஸுக்கு எதிரான போரில் சிறப்பாக பங்காற்றி வருகிறார்கள். கடந்த மாதம் 22-ம் தேதியிலிருந்து கரோனா வைரஸுக்கு எதிரான போரில் மக்கள் செயல்பட்டு வரும் விதம் அனைத்து நாடுகளுக்கும் உதாரணமாக இருந்து வருகிறது. பல நாடுகள் அதை பின்பற்றி வருகிறார்கள்.
மக்கள் ஊரடங்கு, மணி அடித்தல், கை தட்டுதல், அனைத்திலும் தேசத்தில் உள்ள மக்கள் சோதனையான நேரத்தில் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறீர்கள். கரோனாவுக்கு எதிரான போரில் இந்த தேசம் ஆழ்ந்த ஒற்றுமையுடன் இருப்பதை நம்பமுடிகிறது
இன்று கோடிக்கணக்கான மக்கள் ஊரடங்கை மதித்து வீ்ட்டுக்குள் இருக்கிறார்கள்.இந்த நாளில் கரோனாவுக்கு எதிராக எவ்வாறு போரிடப் போகிறோம், வீட்டுக்குள் இருப்பதால் என்ன செய்ய முடியும் என்பது இயல்பாக வரும் கேள்வி. இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே செலவழி்ப்பது என கவலைப்படுவார்கள்.
நாம் யாரும் தனியாக நாம் சொந்த வீட்டுக்குள் இல்லை. 130 கோடி இந்தியர்கள் ஒவ்வொருவரும் வீ்ட்டுக்குள் இருந்து நமது வலிமையைக் காட்டுகிறோம்.
.
கரோனாவால் உருவான இருளை நாம் நம்பிக்கை எனும் ஒளி மூலம் அகற்ற வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை(5-ம் தேதி) இரவு 9 மணிக்கு அனைத்து மக்களும் தங்கள் வீடுகளில் விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்து இந்தியர்களின் வலிமையை வெளிப்படுத்த வேண்டும். அந்த நேரத்தில் வீட்டில் வாசலில் அல்லது பால்கணி பகுதியில் விளக்கு ஏற்றியோ, மெழுகு வர்த்தி ஏற்றியோ, டார்ச்லைட், செல்போன் லைட்டை ஒளிவர விட்டு, சக மக்கள் குறித்து சிந்திக்க வேண்டும்
விளக்கு ஏற்றும் போது மக்கள் அனைவரும் சமூக விலக்கலைக் கடைபிடிக்க வேண்டும். இதுநாள் வரை சமூக விலக்கலைக் கடைபிடித்து, ஊரடங்கை மதித்து வீட்டுக்குள் இருந்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன்
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT